தொடரை வென்றது ஆஸி., இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பல்

ஆறாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் 5 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-2 என முன்னிலை பெற்று இருந்தது.

6வது போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

மோசமான துவக்கம்:
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சேவக், சச்சின் களமிறங்கினர். ஜான்சனின் இரண்டாவது பந்தில் "சூப்பர்' சிக்ஸ் அடித்து சிறப்பாக துவக்கிய சேவக் (6) நிலைக்கவில்லை. அடுத்து வந்த காம்பிர், ரன் எதுவும் எடுக்காமல் போல்டானார்.

சச்சின் 10 ரன்கள் எடுத்த நிலையில், போலிங்கர் பந்தில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் (6), ரெய்னா (0) உடனடியாக திரும்ப, இந்திய அணி 27 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

எளிய இலக்கு:
தோனி, ஜடோஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் வேலையில் ஈடுபட்டது. இருப்பினும் தோனி 24 ரன்னுக்கு அவுட்டாகினார். 8 வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் எடுத்த ஜடேஜா (57) வெளியேறினார்.

இந்திய அணி 48 ஓவரில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரவீண் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். போலிங்கர் 5, ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர் வெற்றி:
எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு மார்ஷ் (6) ஏமாற்றினார். வாட்சன் (49) பாண்டிங் (25) இருவரும் ஹர்பஜன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். ஒயிட் 25 ரன்கள் எடுத்து திரும்பினார். பின்னர் ஹசி, வோஜஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலிய அணி 41.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணி 4-2 என முன்னிலை பெற்றுள்ளது

0 comments:

Post a Comment