இந்திய அணியில் மீண்டும் ஸ்ரீசாந்த்

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பின் வாய்ப்பு பெற்றார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். ஜாகிர், பத்ரிநாத், முரளிவிஜய், ஓஜா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. நெஹ்ரா, முனாப் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி ஆமதாபாத்தில் வரும் 16 ம் தேதி துவங்குகிறது. முதல் 2 போட்டிகளுக்கான அணியை ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழு நேற்று மும்பையில் தேர்வு செய்தது.

ஸ்ரீசாந்த் வருகை:
இந்திய அணியில் சர்ச்சைக்குரிய ஸ்ரீசாந்துக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. 18 மாதங்களுக்குப் பின் வாய்ப்பு பெற்றுள்ள இவர், கடந்த 2008 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். இவரது வருகையால் சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிஷ் நெஹ்ரா புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ஜாகிர்:
தோள்பட்டை காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களிலிருந்து நீக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இலங்கை தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றொரு பவுலர் இஷாந்த் சர்மா தனது இடத்தை உறுதி செய்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பை வீணாக்கிய முனாப், நீக்கப்பட்டுள்ளார்.

பத்ரி, முரளிக்கு வாய்ப்பு:
சமீபகாலமாக உள் நாட்டு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர்களான முரளி விஜய், பத்ரிநாத் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு ஹர்பஜன், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா என மூவர் கூட்டணி தேர்வாகி உள்ளது.

பேட்டிங் படை:
தோனி தலைமையில் வலுவான பேட்டிங் படை தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேவக், சச்சின், காம்பிர், யுவராஜ் ஆகியோர் வழக்கம் போல இடம் பெற்றுள்ளனர். ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வரும் டிராவிட், லட்சுமண் "மிடில் ஆர்டரை' பலப்படுத்தும் நோக்கில் தேர்வு பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி:
தோனி (கேப்டன்), சேவக், சச்சின், காம்பிர், டிராவிட், லட்சுமண், யுவராஜ், பத்ரிநாத், முரளிவிஜய், ஹர்பஜன், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் மற்றும் இஷாந்த் சர்மா.

0 comments:

Post a Comment