"சாம்பியன்' யுவராஜ் நல்ல உதாரணம் - சச்சின்

கடின சிகிச்சைக்கு பின் மிக விரைவாக மீண்ட யுவராஜ், இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி கேன்சரால் பாதிக்கப்பட்ட சாமான்ய மனிதர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்,'' என, சச்சின் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 30. கடந்த ஆண்டில் நுரையீரலில் ஏற்பட்ட கேன்சர் கட்டிக்காக "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். இதிலிருந்து விரைவாக மீண்ட இவர், கடின பயிற்சியில் ஈடுபட்டார். இலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றார்.

இது குறித்து சக இந்திய வீரர் சச்சின் கூறியது:

யுவராஜ் பல கடினமான சிகிச்சைக்கு உட்பட்டார். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள சாமான்ய மனிதர்களுக்கும் நல்ல உதாரணமாக உள்ளார்.

கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில், இவர் தொடர் நாயகன் விருதை இவர் பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை யுவராஜ் என்றுமே சாம்பியன்தான்.

உன்முக்த் சந்த் ஆட்டத்தை மிகவும் ரசித்தேன். இந்திய இளம் அணியினர், உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன், அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டேன். என்னுடைய எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டது நல்லதொரு அனுபவமாக இருந்தது. உலக கோப்பையை வென்றபோது, உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

2011ம் ஆண்டு இந்திய அணிக்கு "ஸ்பெஷலான' ஒன்று. ஆண்டின் முதல் பாதியில் உலக கோப்பைபை வென்றோம். இதற்காக நான் 22 ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த நாளின் மாலைப்பொழுது, மிகவும் சிறப்பானதாக இருந்தது. நாம் கண்ட கனவு நனவாகும்போது, நம்மால் பேச முடியாது. அப்படிப்பட்ட ஒன்றுதான் அந்தத்தருணம்.

100வது சதம் அடித்தது போன்ற நிகழ்வுகள் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கக்கூடியது. அதை விட பெரிய விருதை நான் பெற்றுவிட முடியாது. இவ்வாறு சச்சின் கூறினார்.


ஓய்வு எப்போது?

ஓய்வு குறித்து சச்சின் கூறுகையில்,""என்றைக்கு என்னால் மகிழ்ச்சியுடன் "பேட்' செய்ய முடியவில்லையோ, அன்றுதான் ஓய்வு பற்றி சிந்திப்பேன். அந்த நாள் இன்னும் வர வரவில்லை. அந்த உணர்வு ஏற்படும்போது, ஓய்வு குறித்து சொல்வேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment