டிராவிட், லட்சுமண் இல்லாமல் டெஸ்டில் சாதிக்குமா இந்தியா

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் துவங்குகிறது. இதில், சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் இல்லாமல் இந்தியா களமிறங்குகிறது. இவர்களது ஓய்வு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது இளம் வீரர்கள் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த, இந்திய அணி "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. இதன் பின் இந்திய அணிக்கு வீழ்ச்சி தான். பின் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அங்கும் தோற்க, தற்போது 104 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, ஆஸ்திரேலிய தொடரில் 8 இன்னிங்சில் 6ல் "போல்டான' டிராவிட், நாடு திரும்பிய வேகத்தில் ஓய்வை அறிவித்தார். அணியின் "பெருஞ்சுவராக' வர்ணிக்கப்பட்ட இவர் விடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதிலிருந்து மீள்வதற்குள் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற சீனியர் வீரர் லட்சுமண் திடீரென ஓய்வை அறிவித்தார். டிராவிட்(164 டெஸ்ட், 13,288 ரன்), லட்சுமண்(134 டெஸ்ட், 8781 ரன்) சேர்ந்து 298 டெஸ்டில் 22,069 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இவர்கள் இம்முறை இல்லாதது பெரும் இழப்பு தான். இவர்களுக்குப் பதில் தேர்வாகியுள்ள புஜாரா, ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் இணைந்து, மொத்தம் 20 டெஸ்ட் அனுபவம் தான் உள்ளது. மற்றொரு வீரர் ரகானே, இன்னும் ஒரு டெஸ்டில் கூட களமிறங்கவில்லை.


சச்சின் வருத்தம்:

பேட்டிங்கில் மட்டுமல்லாது, "ஸ்லிப்' பகுதியில் டிராவிட் 210, லட்சுமண் 135 "கேட்ச்' செய்த அனுபவம் உள்ளவர்கள். இதுகுறித்து சச்சின் கூறுகையில்,"" டிராவிட், லட்சுமண் இருவரும் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், "ஸ்லிப்' பகுதியில் சிறந்த பீல்டர்கள். இவர்களது இடங்களை நிரப்புவது மிகவும் கடினம்,'' என்றார்.

இந்நிலையில் நாளை துவங்கும் நியூசிலாந்து தொடரில், இளம் வீரர்களை வைத்துக் கொண்டு கேப்டன் தோனி எப்படி சமாளிக்கப் போகிறார் என்று, பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


வெற்றி முக்கியம்:

தரவரிசையில் 8வது இடத்திலுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், எதிர்வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில், நம்பிக்கையுடன் செயல்பட உதவும். தவிர, இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்காது என்பது ஆறுதல் தான்.


வெட்டோரி இல்லை:

தவிர, சுழலுக்கு சாதகமான இங்கு, நியூசிலாந்து அணியில் அனுபவ வெட்டோரி(தொடைப் பகுதியில் காயம்) இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம். பேட்டிங்கில் இந்திய அணி துவக்க வீரர்கள் காம்பிர், சேவக், "மிடில் ஆர்டரில்' சச்சின், விராத் கோஹ்லியை நம்பியுள்ளது.


"சுழல்' கைகொடுக்குமா:

சுழலில் அஷ்வின், பிரக்யான் ஓஜா இருவரும், நியூசிலாந்து வீரர்களுக்கு தொல்லை தரலாம். ஏனெனில், கடந்த 2011, நவம்பரில் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்த இருவரும் 42 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு உதவினர். இது மீண்டும் தொடரும் என்று நம்புவோம்.


வீழ்த்த முயற்சிப்போம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறுகையில்,""இந்திய அணியை சொந்த மண்ணில் சந்திப்பது பெரும் சவாலானது. இவர்களை வீழ்த்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம்,'' என்றார்.


சச்சின் பார்த்துக் கொள்வார்

டிராவிட் கூறுகையில்,""நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் மற்றும் லட்சுமண் இடம் பெறாத நிலையில், சச்சின் பொறுப்புணர்ந்து செயல்படுõர். கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் சுமைகளை தோளில் சுமக்கும் இவர், தனது பணியை தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது,''என்றார்.

0 comments:

Post a Comment