ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும் தோல்வி கண்டார். இதன்மூலம் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. புதன்கிழமை நடைபெற்ற மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி 2-6 என்ற கணக்கில் பிரிட்டனின் ஆமி ஆலிவரிடம் தோல்வி கண்டார்.
போட்டியின் முடிவில் இருவரும் தலா 104 புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும், 3 செட்களை வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பிரிட்டனின் ஆமி ஆலிவர். லார்ட்ஸ் மைதானத்தில் நிலவிய குளிர், தீபிகாவுக்கு பாதகமாக அமைந்தது.
தோல்விக்குப் பிறகு இது தொடர்பாக தீபிகா கூறுகையில், "நான் நினைத்ததைவிட அதிவேகமாக சுழற்காற்று வீசியது. அதனால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு என்னால் பொருந்தி போக முடியவில்லை. என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றோடு வெளியேறியது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. வரும்காலங்களில் நன்றாக பயிற்சி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக்கில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவேன்' என்றார்.
இந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் ஜெயந்தா தலுக்தார், ராகுல் பானர்ஜி, தருண்தீப் ராய் ஆகியோரும், மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, எல்.பி. தேவி, செக்ரோவ்லு ஸ்வுரு ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களில் ராகுல் பானர்ஜி, தருண்தீப், எல்.பி.தேவி ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுவரை முன்னேறி தோல்வி கண்டனர். மற்றவர்கள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர்.
0 comments:
Post a Comment