ஓய்வு பெறும் திட்டம் இப்போது இல்லை - தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சீனியர் வீரர் தெண்டுல்கர். 1989-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் 23 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

189 டெஸ்டில் விளையாடி 15,489 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளனர். டெஸ்டில் 51 சதமும், ஒருநாள் போட்டியில் 49 சதமும் அடித்துள்ளார். இதில் எல்லாமே அவர்தான் உலக சாதனையாளர் ஆவார்.

டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த லட்சுமண், டிராவிட் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இதனால் 39 வயதான தெண்டுல்கருக்கு ஓய்வுபெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 19 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதற்கிடையே தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும், உடல் தகுதியுடன் இருக்கும் வரை ஆடுவேன் என்றும் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தற்போது நல்ல உடல் தகுதியுடன் உள்ளேன். ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறேன். என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ அதுவரை ஆடுவேன். இதனால் இப்போது ஓய்வு திட்டம் எதுவும் இல்லை. அணியில் சீனியர் வீரராக இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்துதான் ஆடுகிறோம். ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்பு அந்த தொடருக்கான நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்கிறேன் உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 99-வது சதத்தை அடித்தேன். அப்போது யாரும் எனது 100-வது சதத்தை பற்றி பேசவில்லை. ஏனென்றால் அனைவரது நோக்கமும் உலக கோப்பையை வெல்வதாக இருந்தது.

உலக கோப்பை முடிந்த பிறகு ஒவ்வொருவரது எண்ணமும் எனது 100-வது சதத்தை பற்றிதான் இருந்தது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடிக்க நெருங்கி வந்தேன். துரதிருஷ்டவசமாக தவறவிட்டேன். டாக்காவில் 100-வது சதத்தை அடிக்க முடிந்தது. டிராவிட், லட்சுமண் இடத்தை ஒரே நாளில் நிரப்பிவிட முடியாது.

அஸ்வினின் பந்துவீச்சு நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது. நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை போட்டியில் கேப்டன் உன்முக்த்சந்த் தனது திறமையை நிரூபித்தார். கூட்டு முயற்சியால் தான் இந்த உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது. இது மிகவும் பாராட்டத்தக்கது.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment