ஒலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கம் வென்று சாதிப்பேன்,'' என, லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில் வெண்கலம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் அரையிறுதி வரை முன்னேறினார். அரையிறுதியில் சீனாவின் இகான் வாங்கிடம் தோல்வி அடைந்தார்.
பின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மற்றொரு சீன வீராங்கனையான ஜின் வாங்கை சந்தித்தார். இதில் ஜின் வாங் காயம் காரணமாக பாதியில் விலகியதால் செய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இவர், மல்லேஸ்வரிக்கு (2000, சிட்னி) பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இது, தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 10வது ஒலிம்பிக் பதக்கம்.
உற்சாக வரவேற்பு:
நேற்று லண்டனில் இருந்து டில்லி வந்த செய்னா நேவல், அவரது தந்தை ஹர்விர் சிங் மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு இந்திரா சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் அங்கிருந்து, சொந்த ஊருக்கு செல்ல ஐதராபாத் செல்லும் விமானத்தில் புறப்பட்டார்.
டில்லியில் செய்தியாளர்களுக்கு செய்னா அளித்த பேட்டி: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது நீண்ட நாள் கனவு. இருப்பினும் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. தவிர, ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை கூடுதல் உற்சாகம் அளிக்கிறது.
பதக்கம் பெறுவதற்காக மேடை ஏறியபோது அழ ஆரம்பித்துவிட்டேன். இத்தருணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. இதை விட சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை. இது, எனது கடின உழைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது ஆரம்பம் தான். ஒலிம்பிக் போட்டியில் இன்னும் நிறைய பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தருவேன்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின், என்னை சாம்பியனாக உணர்கிறேன். இதற்காக முதலில் பயிற்சியாளர் கோபிசந்த், எனது தந்தைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இந்த அளவுக்கு என்னால் சாதித்திருக்க முடியாது. இதேபோல சக வீரர், வீராங்கனைகள், போட்டியின் போது ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதக்கம் வென்ற பின், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதிக்க வாழ்த்தினர்.
பீஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய நான், இம்முறை பதக்கம் வென்று சாதித்தேன். ஆண்கள் ஒற்றையரில் காஷ்யப் காலிறுதி வரை முன்னேறினார். கலப்பு இரட்டையரின் ஜுவாலா கட்டா, திஜு ஜோடி நன்றாக விளையாடியது. இந்திய நட்சத்திரங்களின் செயல்பாடு, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கம் வென்று சாதிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு செய்னா நேவல் கூறினார்.
வாழ்க்கை முழுமையானது: கோபிசந்த்
செய்னா நேவல் பதக்கம் வென்றது குறித்து அவரது பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ""லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில் செய்னா நேவல் பதக்கம் வென்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இதன்மூலம் எனது வாழ்க்கையும் முழுமையானது. ஒருவேளை பதக்கம் பெற முடியாமல் போனால், வாழ்க்கை முழுமை பெற்றிருக்காது.
இது செய்னாவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதற்காக இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தார். இன்னும் இவர் இரண்டு ஒலிம்பிக், இரண்டு ஆசிய விளையாட்டு மற்றும் இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று நிறைய பதக்கம் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.
0 comments:
Post a Comment