குத்துச்சண்டை - அரையிறுதியில் மேரி கோம்

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் இந்தியாவின் மேரி கோம் (51 கி.கி.,) முன்னேறினார். இதன்மூலம் குறைந்தது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். வட்டு எறிதல் போட்டியின் பைனலுக்கு இந்திய வீரர் விகாஷ் கவுடா முன்னேறினார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான குத்துச்சண்டை "பிளை வெயிட் 51 கி.கி., எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மேரி கோம், டுனிசியாவின் மரோயா ரஹாலியை சந்தித்தார்.


மேரி ஆதிக்கம்:

இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே மேரி கோம் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றை 2-1 எனக் கைப்பற்றிய மேரி கோம், இரண்டாவது சுற்றில் 3 புள்ளிகள் பெற்று 5-3 என முன்னிலை வகித்தார். மூன்றாவது சுற்றில் அபாரமாக ஆடிய இவர் 6 புள்ளிகள் பெற்றார். கடைசி சுற்றில் 4 புள்ளிகள் பெற்ற மேரி கோம் 15-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.


மூன்றாவது பெண்:

இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார் மேரி கோம். ஏனெனில் அரையிறுதியில் ஒருவேளை இவர் தோல்வி அடைந்தால் கூட வெண்கலப் பதக்கம் கிடைக்கும். இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறார்.

தவிர இவர், மல்லேஸ்வரி (2000), செய்னா நேவலுக்கு (2012) பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெறுகிறார்.
நாளை நடக்கவுள்ள அரையிறுதியில் மேரி கோம், இங்கிலாந்தின் நிகோலா ஆதம்சை சந்திக்க உள்ளார்.


பைனலில் விகாஷ்:

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விகாஷ் கவுடா பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 65 மீ., தூரம் வட்டு எறிந்தால் பைனலுக்கு நேரடியாக தகுதிபெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் 63.52 மீ., தூரம் வட்டு எறிந்த விகாஷ் கவுடா, இரண்டாவது வாய்ப்பில் 65.20 மீ., தூரம் எறிந்தார். இதன்மூலம் பைனலுக்கு நேரடியாக முன்னேறினார். இன்று பைனல் நடக்கிறது.

தவிர இவர், ஒலிம்பிக் தடகளப் போட்டியின் பைனலுக்கு முன்னேறிய ஏழாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக மில்கா சிங் (400 மீ., ஒட்டம், 1960), குர்பச்சான் சிங் ரந்தவா (100 மீ., தடை ஓட்டம், 1964), ஸ்ரீராம் சிங் (800 மீ., ஓட்டம், 1976), பி.டி. உஷா (400 மீ., தடை ஒட்டம், 1984), அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல், 2004), கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல், 2012) ஆகியோர் பைனல் வரை முன்னேறினர்.


ககன் நரங் "அவுட்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள்-3 பொஷிஷன்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் "புரோன் பிரிவில் 398 புள்ளிகள் பெற்ற ககன் நரங், "ஸ்டேண்டிங் பிரிவில் 377 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அடுத்து நடந்த "நீலிங் பிரிவில் 389 புள்ளிகள் பெற்ற ககன் நரங், மொத்தம் 1164 புள்ளிகள் பெற்று, 20வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

மற்றொரு இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் 1161 புள்ளிகள் (395 + 378 + 388) பெற்று, 26வது இடம் பிடித்து தகுதிச் சுற்றோடு வெளியேறினார்.


மனவ்ஜித் ஏமாற்றம்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் "டிராப் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் மனவ்ஜித் சிங் சாந்து பங்கேற்றார். தகுதிச் சுற்றில் மொத்தம் 119 புள்ளிகள் பெற்ற இவர், 16வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.


ஆறுதல் வெற்றி கிடைக்குமா * ஹாக்கியில் இன்று கடைசி மோதல்

ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசி லீக் ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. "பி பிரிவில் உள்ள இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் துணிச்சலாக போராடியது. இதையடுத்து, அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகமானது.

ஆனால், அடுத்து எல்லாமே தலைகீழானது. நியூசிலாந்துடனான போட்டியில் 1-3 என தோற்று, பின், "நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு எதிராக 2-5 என, படு மோசமாக தோல்வியடைந்தது. கடந்த போட்டியில் தென் கொரியாவுடன் 1-4 என, வீழ்ந்தது.

இன்று தனது கடைசி லீக் போட்டியில் பெல்ஜியத்தை சந்திக்கிறது. தொடரின் துவக்கத்தில் பலவீனமான அணியாக கருதப்பட்ட பெல்ஜியம், தென் கொரியாவை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்துள்ளது.

இதனால் இன்று இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறவே கடுமையாக போராட வேண்டியது இருக்கும். தவிர, இதில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி "பி பிரிவில் தற்போதுள்ள கடைசி இடம் மாறாது.


வரலாறு திரும்புமா:

ஒருவேளை வரும் 11ம் தேதி நடக்கும் 11, 12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அல்லது தென் ஆப்ரிக்காவை சந்திக்கும். இதிலும் தோற்கும் பட்சத்தில், 1986ல் லண்டனில் நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கடைசி இடம் பெற்ற நிலை ஏற்படலாம்.

இதே பிரிவில் இன்று நடக்கும் பிற போட்டிகளில் ஜெர்மனி-நியூசிலாந்து, தென் கொரியா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

0 comments:

Post a Comment