இந்திய ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக்கில் கடைசி இடம்

லண்டன் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு மிகப் பெரும் தலைகுனிவு ஏற்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியதால், தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கடைசி (12) இடம் பெற்று ஏமாற்றியது.

ஒலிம்பிக் ஹாக்கியில் எட்டு முறை தங்கம் வென்ற பெருமைமிக்கது இந்திய அணி. எட்டு ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக கோல் கீப்பர் கேப்டன் பரத் சேத்ரி தலைமையில் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

"பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா மற்றும் பெல்ஜியம் என, பங்கேற்ற ஐந்து லீக் போட்டியிலும் தோல்வியடைந்தது.

நேற்று நடந்த 11 அல்லது 12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. போட்டியின் 8வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஆன்ட்ரூ குரோன்யே முதல் கோல் அடித்தார்.

14வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிய சற்று (34வது நிமிடம்) முன்பாக, தென் ஆப்ரிக்காவின் டிமோத்தி ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1-2 என பின்தங்கியது.


ஆறாவது தோல்வி:

இரண்டாவது பாதியில் எளிதாக கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை, "பினிஷிங்' திறமை இல்லாத இந்திய வீரர்கள் வீணடித்தனர். 65வது நிமிடம் லாய்டு ஜோன்ஸ் ஒரு கோல் அடிக்க, தென் ஆப்ரிக்கா அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடத்தில் (67 வது) தரம்வீர் சிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.

முடிவில், இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதன் மூலம், இத்தொடரில் தொடர்ந்து ஆறாவது தோல்வியை சந்தித்து, கடைசி இடம் பிடித்தது.


மோசமான இடம்:

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிகபட்சமாக (1928, 32, 36, 48, 52, 56, 64, 1980) 8 முறை தங்கம் வென்றது. தவிர, 1960ல் வெள்ளி, 1968, 72ல் வெண்கலம் வென்றுள்ளது. இதன் பின் 1984ல் 5வது, 1988ல் 6, 1992ல் 7, 1996ல் 8, 2000, 2004ல் 7வது இடம் பெற்றது.

தற்போது தான் முதன் முறையாக இந்திய அணி, கடைசி (12வது) இடம் பெற்றுள்ளது. தவிர, ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இந்தியா திரும்புவதும் இது தான் முதன் முறை.


ராசியில்லாத லண்டன்:

ஏற்கனவே லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் (1948) இந்திய அணி தங்கம் வென்று திரும்பியது. இதன் பின் இந்தியாவுக்கும் லண்டனுக்கும் ராசியில்லை போல. 1986ல் நடந்த உலக கோப்பை தொடரில் கடைசி இடம் பெற்ற இந்திய அணி, மீண்டும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

0 comments:

Post a Comment