முதல் பந்தை சந்திக்க பயமா? - மனம் திறக்கிறார் சேவக்

கிரிக்கெட் போட்டிகளில் துணிச்சலாக "பேட்' செய்யும் சேவக்கிற்கு, முதல் பந்தை சந்திக்கும் போது பதட்டமாக இருக்குமாம்.

இந்திய அணியின் துவக்க வீரர் சேவக். அதிரடி ஆட்டத்தில் கில்லாடியான இவர், பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விடுவது வழக்கம். இவருக்கும் களத்தில் இருக்கும் போது பதட்டம் ஏற்படுவதுண்டு.

இதுகுறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்தை சந்திக்கும் போது மனதில் லேசான நடுக்கம் இருக்கும். அப்போது எனது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்புது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் இதனை ஒருபோதும் வெளிப்படுத்தியது கிடையாது.

ஏனெனில் அது எதிரணி பவுலர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதனால் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து, எனது விக்கெட்டை விரைவில் கைப்பற்றிவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் பந்தை எதிர்கொள்ளும் போது, தன்னம்பிக்கையுடன் விளையாடுவதால், ஆரம்பம் முதல் அடித்து ஆட முடிகிறது.

மனவலிமையும், தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த ஒரு பவுலரின் பந்தையும் சமாளித்து விடலாம். பொதுவாக சர்வதேச போட்டிகளில் மனவலிமை முக்கியமான ஒன்று. பேட்ஸ்மேனாக
இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி மனம் தளராமல் போராடினால் இலக்கை அடைந்துவிடலாம்.

சச்சினுடன் இணைந்து விளையாடும் போது "ரிலாக்சாக' இருக்கலாம். ஏனெனில் எதிரணியினர் சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ளனர். ஆனால் காம்பிருடன் விளையாடும் போது, அதிக நெருக்கடி ஏற்படும்.ஏனெனில் கவனம் என் மீது தான் அதிகம் இருக்கும். இதுபோன்ற நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடுவேன்.

போட்டியில் "டக்-அவுட்' ஆனாலும் சரி, 300 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் சரி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குவேன்.

சில நேரங்களில் விக்கெட்டை விரைவில் இழந்து திரும்ப நேரிடும். இதுபோன்ற சமயங்களில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த போட்டியில் சாதிக்க முடியும். இவ்வாறு சேவக் கூறினார்.

இந்திய அணியில் அடித்து ஆடக்கூடிய திறமையான வீரர்கள் நிறைய வந்துவிட்டனர். விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆகியோர் விரைவில் பந்தை சிக்சருக்கு அனுப்பும் திறமை பெற்றுள்ளனர்.

இதேபோல டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்ளிட்ட மற்ற அணி வீரர்களும் அடித்து ஆடுவதில் திறமையானவர்கள்.
இவ்வாறு சேவக் கூறினார்.

0 comments:

Post a Comment