இந்திய "அப்பீல்' நிராகரிப்பு ஏன்?

பாட்மின்டன் பெண்கள் இரட்டையரில், ஜப்பான் ஜோடிக்கு எதிரான இந்திய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பிக் பாட்மின்டனில் "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட்ட சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த 8 வீராங்கனைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, "ஏ', "சி' பிரிவில் 3, 4 வது இடம்பெற்ற ரஷ்யா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சீன தைபே ஜோடிக்கு எதிராக, ஜப்பான் ஜோடி வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்றது.

இதன் மூலம் இந்திய ஜோடியை வெளியேற்ற ஜப்பான் திட்டமிட்டு செயல்பட்டது என, பயிற்சியாளர் கோபிசந்த், புகார் தெரிவித்தார். இதை ஏற்க சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) மறுத்துவிட்டது.


காரணம் என்ன:

ஏனெனில், ஜப்பான் தோடி தோற்றது ஒரு புறம் இருந்தாலும், இந்திய அணிக்கு காலிறுதிக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருந்ததாம். அதாவது, சிங்கப்பூர் ஜோடிக்கு எதிரான முதல் செட்டை வென்றது ஜுவாலா-அஷ்வினி ஜோடி.

இரண்டாவது செட்டை இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டும். தவிர, இதில் சிங்கப்பூர் ஜோடியை 13 புள்ளிக்கு மேல் எடுக்க விடக் கூடாது என்ற நிலை இருந்தது. ஒரு நிலையில் இந்திய ஜோடி 9-0 என முன்னிலையில் இருந்தது.


நமது தவறு:

எளிதான வெற்றி காத்திருந்த நிலையில், திடீரென சொதப்பிய இந்திய ஜோடி, சிங்கப்பூரை 15 புள்ளிகள் எடுக்க விட்டுவிட்டனர். இதனால், இந்திய அணி 21-16, 21-15 என, வென்ற போதிலும், காலிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

இப்படி தங்கள் தரப்பில் தவறை வைத்துக் கொண்டு, ஜப்பான் ஜோடி பங்கேற்ற போட்டி குறித்து அப்பீல் செய்ததால் தான், பி.டபிள்யு.எப்., கோரிக்கையை நிராகரித்து விட்டதாம்.


இதயமே நொறுங்கியது

பாட்மின்டன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன வீராங்கனை யு யங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கனவுகள் சிதைந்து விட்டன. இதயமே நொறுங்கி விட்டது. இங்கு பங்கேற்றது தான் எனது கடைசி போட்டி,'' என்றார்.

0 comments:

Post a Comment