டுவென்டி-20 உலக கோப்பை - இந்திய அணியில் யுவராஜ் சிங்

இலங்கையில் நடக்கவுள்ள "டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளார். ஹர்பஜன் சிங், பாலாஜி உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இலங்கையில் செப்., 18 - அக்., 7ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் தேர்வு மும்பையில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இவரது நுரையீரலில் உருவான "கேன்சர் கட்டிக்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின் பூரண குணமடைந்த இவர், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது பயிற்சியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது.

சமீபகாலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல தமிழக வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் தென் ஆப்ரிக்காவில் நடந்த முதலாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் விளையாடிய தோனி, காம்பிர், சேவக், யுவராஜ் சிங், இர்பான் பதான், ரோகித் சர்மா, பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 8 வீரர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.

வேகத்தில் சாதிக்க ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகியோருடன் அசோக் டிண்டாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுழலில் அஷ்வின், பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் இடம் பிடித்துள்ளனர். பேட்டிங்கில் அசத்த விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணி: தோனி (கேப்டன்), காம்பிர், சேவக், யுவராஜ், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரி, ரோகித் சர்மா, இர்பான் பதான், அஷ்வின், ஜாகிர் கான், பாலாஜி, பியுஸ் சாவ்லா, ஹர்பஜன், அசோக் டிண்டா.

இதே அணியினர் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் விளையாடுகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஹர்பஜன், ரோகித் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

டெஸ்ட் தொடருக்கு லட்சுமண், அஜின்கியா ரகானே, புஜாரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா, பியுஸ் சாவ்லா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment