கோப்பை வென்றது இந்தியா - இலங்கை மீண்டும் தோல்வி

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 4-1 என வென்று, கோப்பையை கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில், இந்திய அணி 3-1 என, தொடரை வென்றது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, பல்லேகெலேயில் நடந்தது.


மாத்யூஸ் கேப்டன்:

"டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சேவக் நீக்கப்பட்டு, ரகானே வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர்தனா, ஹெராத்துக்கு பதில், சேனநாயகே, கபுகேதிரா இடம் பெற்றனர். இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பை ஏஞ்சலோ மாத்யூஸ் ஏற்றார்.


ரோகித் வீண்:

இந்திய அணிக்கு ரகானே (9) அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தார். விராத் கோஹ்லி 23 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா (4), வழக்கம் போல விரைவில் திரும்பினார். பின், காம்பிர், மனோஜ் திவாரி ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

காம்பிர் தனது 33வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் மனோஜ் திவாரி, முதல் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில், மனோஜ் திவாரி (65) அவுட்டானார். ரெய்னா வந்த வேகத்தில் "டக் அவுட்டானார். காம்பிர் 88 ரன்னில் திரும்பினார்.


தோனி அதிரடி:

அடுத்து வந்த தோனி, அதிரடியில் மிரட்டினார். பெரேரா ஓவரில் "ஹாட்ரிக் பவுண்டரி அடித்த இவர், 46வது அரைசதம் அடித்தார். 38 பந்துகளில் தோனி 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் குவித்தது. இர்பான் (29), அஷ்வின் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


தில்ஷன் "டக்:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணி இர்பான் பதான் வேகத்தில் திணறியது. இவரது பந்துவீச்சில் துவக்கத்தில் தில்ஷன்(0), தரங்கா(0) வெளியேறினர். சண்டிமால் (8), மாத்யூஸ் (13), கபுகேதிரா (9) நீடிக்கவில்லை.


திரிமான்னே அபாரம்:

அடுத்து இணைந்த திரிமான்னே, ஜீவன் மெண்டிஸ் ஜோடி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. திவாரி ஓவரில் 2 சிக்சர் அடித்த திரிமான்னே, தனது 4வது அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில் திரிமான்னே (77) அவுட்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ், முதல் அரைசதம் (72) அடித்த போதும், அது வெற்றிக்கு உதவவில்லை.

கடைசி நேரத்தில் பெரேரா (18), சேனநாயகே (7), மலிங்கா (10) ஏமாற்ற, இலங்கை அணி 45.4 ஓவரில், 274 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

இந்தியா சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய இர்பான் பதான், ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகனாக விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார்.


இனி "நம்பர்-2

இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி, சர்வதேச தரவரிசையில் 2வது இடத்துக்கு (119) முன்னேறியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (119) தசம புள்ளி வித்தியாசத்தில் உள்ளது. அடுத்த 3 இடங்களில் தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (118), இலங்கை (110) அணிகள் உள்ளன.

0 comments:

Post a Comment