மீண்டும் பதக்கம் வெல்வாரா ககன்?

லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று நடக்கவுள்ள 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் பங்கேற்கிறார். ஏற்கனவே 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் வெண்கலம் வென்ற இவர், மீண்டும் ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இன்று நடக்கவுள்ள ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் இந்தியா சார்பில் ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புட் பங்கேற்கின்றனர்.

இம்முறை ககன் நரங் மூன்று பிரிவு போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் ககன் நரங் வெண்கலம் வென்று, இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தார். ஆனால் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவில் பைனலுக்கான தகுதிச் சுற்றில் 18வது இடம் பிடித்து வெளியேறினார்.

கடைசி வாய்ப்பான 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் பதக்கம் வென்று சாதிப்பார் என நம்பப்படுகிறது. ஏனெனில் இவர், மெல்போர்ன் (2006) மற்றும் டில்லி (2010) காமன்வெல்த் போட்டியில் 50 மீ., "ரைபிள்-3' தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டியில் மொத்தம் 4 தங்கம் வென்றுள்ளார்.

தவிர 2009ல் நடந்த உலக கோப்பை தொடருக்கான 50 மீ., "ரைபிள்-3' பிரிவில் ஒரு தங்கம் வென்றுள்ளார்.

சஞ்சீவ் ராஜ்புட், 2006ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டி 50 மீ., "ரைபிள்-3' தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றார். டில்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 50 மீ., "ரைபிள்-3' தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.

இதனால் இன்றைய போட்டியில் குறைந்தபட்சம் ஒரு பதக்கம் கிடைக்கலாம்.


சாதிப்பாரா விகாஷ் கவுடா:

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விகாஷ் கவுடா பங்கேற்கிறார். டில்லி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற இவர், 2010ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் இவர் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் குறைந்தபட்சம் வெண்கலம் வென்று சாதிக்கலாம்.


விஜேந்தர் எதிர்பார்ப்பு:

கடந்த பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய வீரர் விஜேந்தர் சிங், இன்று நடக்கவுள்ள "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில், உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவை சந்திக்கிறார்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அரையிறுதிக்கு முன்னேறலாம். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பை உறுதி செய்யலாம். டில்லி காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற விஜேந்தர், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.

0 comments:

Post a Comment