முதல் முறையாக இந்தியாவுக்கு 6 பதக்கம்

லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சிறந்ததாக அமைந்தது. இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபதக்கம் பெற்று சாதனை படைத்தது.

இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண்கலம் ஆக மொத்தம் 3 பதக்கம் பெற்றதே அதிக பதக்கமாக இருந்தது. முதல் முறையாக 6 பதக்கம் கிடைத்து உள்ளது.

துப்பாக்கி சுடுதலில் விஜய்குமாரும் (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), மல்யுத்தத்தில் சுசில் குமாரும் (66 கிலோ பிரீஸ்டைல்) வெள்ளிப்பதக்கம் பெற்றனர். துப்பாக்கி சுடுதலில் ககன்நரங் (10 மீட்டர் ஏர்ரைபிள்), பேட்மின்டனில் சாய்னா நேவால் (பெண்கள் ஒற்றையர்), குத்துச்சண்டையில் மேரிகோம் (பிளைவெயிட்), மல்யுத்தத்தில் யோகஸ்வர் தத் (60 கிலோ பிரிவு) ஆகியோர் வெண்கலபதக்கம் பெற்றனர்.

81 பேர் கொண்ட இந்திய அணிக்கு 6 பதக்கம் கிடைத்தது. எந்த ஒலிம்பிக்கிலும் இல்லாத அளவுக்கு இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் பெற்றாலும் தங்கம் கிடைக்காதது சற்று ஏமாற்றமே.

நேற்றைய கடைசி நாளில் சுசில்குமார் இறுதிப்போட்டியில் வென்று தங்கம் கைப்பற்றி இருந்தால் இதைவிட பெருமை அதிகமாக இருந்து இருக்கும். இடவரிசையில் 41-வது இடத்தை பிடித்து இருக்கலாம். தற்போது 55-வது இடத்தை பிடித்து இருக்கிறோம்.

வில்வித்தை, டென்னிஸ், ஆக்கி ஆகிய போட்டிகள் இந்தியாவுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. உலகின் நம்பர் ஒன் வில் வித்தை வீராங்கனையான தீபிகாகுமாரி முதல் சுற்றிலேயே வெளியேறியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

டென்னிஸ் போட்டியில் வீரர்கள் சாதிக்காதது வருத்தமே. போட்டி தொடங்கும் முன்பு டென்னிஸ் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஆக்கியில் மிகவும் பரிதாப நிலையில் உள்ளோம்.

தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் தோற்று இந்திய அணி கடைசி இடமான 12-வது இடத்தை பிடித்தது. ஒரு வெற்றிகூட பெற இயலாதது ஏமாற்றமே.

0 comments:

Post a Comment