கேப்டன் பதவி மீது ஆசை - காம்பிர்

இந்திய அணியின் "சூப்பர் பேட்ஸ்மேனாக' கவுதம் காம்பிர் உருவெடுத்துள்ளார். சமீப காலமாக ரன் மழை பொழியும் இவர், இந்த ஆண்டின் ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் விருதை தட்டிச் சென்றார். மிக விரைவில் அணியை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லியை சேர்ந்த அதிரடி வீரர் காம்பிர். இந்த ஆண்டு தூள் கிளப்பிய இவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 4 சதம், ஒரு அரைசதம் உட்பட 727 ரன்கள்(சராசரி 90.87) எடுத்தார். 27 ஒரு நாள் போட்டிகளில் 2 சதம், 5 அரைசதம் சேர்த்து 848 ரன்கள்(சராசரி 40.38) விளாசினார்.

தற்போது 28 வயதான இவர், ரஞ்சி டிராபி போட்டிகளில் டில்லி அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். தவிர, ஐ.பி.எல்., "டில்லி டேர்டெவில்ஸ்' அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது தோனிக்கு தடை விதிக்கப்பட்ட போது, காம்பிரின் பெயரும் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அனுபவ அடிப்படையில் சேவக் வாய்ப்பு பெற்றார்.

இந்தச் சூழலில் தனது கேப்டன் ஆசை குறித்து காம்பிர் அளித்த பேட்டி:

இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது மிகப் பெரிய கவுரவம். தவிர, அதிக பொறுப்பு வாய்ந்த பணி. தற்போது இப்பணியில் தோனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையை சொன்னால், கேப்டன் பதவி பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை.

அந்த ஆசை எல்லாம் தற்போதைக்கு இல்லை. என்னை பொறுத்தவரை நாட்டுக்காக விளையாடி, அதிக ரன்களை குவிப்பதே முக்கியம். அணியை வழிநடத்திச் செல்லும் ஒருவர் பேட்டிங் அல்லது பவுலிங்கில் சோபிக்காவிட்டால், அவருக்கு மகிழ்ச்சி கிடைக்காது.


ஆதரவு இல்லை:

கடந்த 2003ல் கங்குலி கேப்டனாக இருக்கும் போது அறிமுகமானேன். சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதால் நீக்கப்பட்டேன். சுமார் இரண்டரை ஆண்டு கால போராட்டத்துக்கு பின் டிராவிட் தலைமையிலான அணியில் வாய்ப்பு பெற்றேன்.

இதையடுத்து சிறப்பாக விளையாடினால் தான் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்பது என் மனதில் ஆழமாக பதிந்தது. சில வீரர்களுக்கு கிடைத்தது போல எனக்கு யாரும் துவக்க கட்டத்தில் ஆதரவு அளிக்கவில்லை.

பெரிய ஸ்கோர்: டில்லி அணியின் மற்ற வீரர்களோடு ஒப்பிடுகையில் என்னிடம் இயல்பான பேட்டிங் திறன் இல்லை என்று ஒரு காலத்தில் நினைத்தது உண்டு. தற்போது இந்த எண்ணம் மாறி விட்டது. மிகப் பெரும் ஸ்கோர்களை எடுப்பதே முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

மிக விரைவாக 20 ரன்களை எடுப்பதால் பயனில்லை. நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்து, அணிக்கு வெற்றி தேடி தருவதையே ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதிரடியாக 30 முதல் 40 ரன்கள் எடுப்பதை சில காலம் தான் ரசிப்பார்கள்.

ரசிகர்கள் எப்போதும் "சிக்சர்களை' எதிர்பார்க்கலாம். ஆனாலும், அவர்களுக்காக ஆடுவதை காட்டிலும் அணிக்காக, நாட்டுக்காக பொறுப்பாக விளையாடுவதே மிகவும் முக்கியம்.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

0 comments:

Post a Comment