அடுத்த சச்சின் யாருமில்லை

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனை மன்னனாக திகழ்கிறார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவருக்கு நிகராக இன்னொரு வீரர் உருவாக வாய்ப்பில்லை என்று ஆணித்தரமாக சொல்கிறார் இலங்கையின் முரளிதரன்.


இலங்கை அணியின் "சுழல்' நட்சத்திரம் முரளிதரன் (38). 129 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர் 783 விக்கெட் சாய்த்துள்ளார். தவிர, 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 512 விக்கெட்டுகள், <உலகில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் சாதனை படைக்க உள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் இந்திய "மீடியாவில்' வெளியான ஒரு செய்தியில்,"" பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் மும்பை மாணவர் சர்பராஸ் கான், 439 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியாவின் இன்னொரு சச்சினாக உருவெடுத்துள்ளார்,'' என கூறப்பட்டிருந்தன.


இதுகுறித்து முரளிதரன் அளித்த பேட்டி: சமீபத்தில் மும்பை மாணவர் ஒருவர் பள்ளி அளவிலான போட்டியில் 400க்கும் அதிகமான ரன்கள் எடுத்தார் என பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன். அதில் அந்த மாணவர், இந்தியாவின் அடுத்த சச்சின் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் எப்படி அவ்வாறு கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. சாம்பியன் பேட்ஸ்மேனான சச்சின், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்து அசத்தி வருகிறார்.


இந்நிலையில் திடீரென வந்த அந்த மாணவனை சச்சினுக்கு மாற்று எனக் கூற முடியாது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சரி, சச்சினைப் போல எந்த வீரரையும் அடையாளம் காண முடியாது. அவரைப்போல யாரும் இனி உருவாகப் போவதில்லை. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் அவர்.


சாதனை வீரர்: சச்சின் தனது 44 வயதிலும் ரன்கள் குவித்துக்கொண்டிருப்பார். ஏனென்றால் அவரது ஆட்டமுறை அப்படி உள்ளது. இவருக்கு இயற்கையாய் அமைந்துள்ள இந்த மனப்பாங்கும், தந்திரமும் தான், சாதனை வீரராக உருவெடுக்க வைத்துள்ளது.


ஒப்பிட முடியாது: வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவுடன் ஒப்பிட்டால் கூட, இந்தியாவின் சச்சின் தான் சிறப்பான வீரர். அவரை யாருடனும் ஒப்பிடமுடியாது. இப்படி இருக்கையில் எப்படி மீடியா, அடுத்த சச்சின் என ஒருவரை குறிப்பிடுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்

0 comments:

Post a Comment