ஐ.பி.எல்., தொடர்: பாக்., வீரர்கள் இல்லை

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்'' என ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோரும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதலாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் பாகிஸ்தான் அணியிலிருந்து 11 வீரர்கள் பங்கேற்றனர். கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் வீரர்களை போட்டியில் பங்கேற்க அனுமதி மறுத்தன.

இதனால் தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்., தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் 12ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க வீரர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை (பி.சி.பி.,) அனுகினர். பி.சி.பி., இதற்காக அந்நாட்டு விளையாட்டு துறையிடம் அனுமதி கோரியிருந்தது.

ஆனால் விளையாட்டு துறையோ, வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் சம்மதம் தெரிவிப்பதாக தெரிவித்திருந்து. சமீபத்தில் வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியது. இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை எதிர்நோக்கி பி.சி.பி., இருந்தது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ., கொடுத்த கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இத்தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தனியார் டிவி சேனலில் கூறினார்.

இதுகுறித்து லலித் மோடி கூறியதாவது:

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஏனெனில் பாகிஸ்தான் வீரர்கள், அந்நாட்டு கிரிக்கெட் போர்டிடம் இருந்து "விசா' குறித்த முறையான அனுமதி கடிதம் பெற்றுத்தரவில்லை.

இதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிந்து விட்டதால், மேலும் கூடுதல் நேரம் கொடுக்க இயலாது. இதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலாக, மாற்று வீரர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு, எட்டு அணிகளின் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டோம்.

இவ்வாறு லலித் மோடி கூறினார்

0 comments:

Post a Comment