யுவராஜ் சிங் நீக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியில் இருந்து யுவராஜ் சிங், நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய கேப்டனாக இலங்கையின் சங்ககரா அல்லது ஜெயவர்தனா நியமிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா உள்ளனர். இந்த அணியின் கேப்டனாக, நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யுவராஜ் சிங் உள்ளார்.

முதல் ஐ.பி.எல்., (2008) தொடரில் இந்த அணி அரையிறுதி வரை முன்னேறி சாதித்தது. ஆனால் கடந்த (2009) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பங்கேற்ற 14 போட்டிகளில் 7ல் வெற்றி, 7ல் தோல்வியடைந்தது.

இது அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தவிர, உரிமையாளர்கள் பிரித்தி ஜிந்தா, நெஸ் வாடியா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


மாற்றம் தேவை:
இந்நிலையில் வரும் ஐ.பி.எல்.,-3 தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்துவதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன் ஒருபகுதியாக கேப்டன் பொறுப்பில் இருந்து யுவராஜ் நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து யுவராஜிடம் கேட்டதற்கு எவ்வித பதிலும் அளிக்க மறுத்துள்ளார்.

சங்ககரா கேப்டன்?:
இவருக்குப் பதிலாக இலங்கையில் சங்ககரா அல்லது ஜெயவர்தனா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து சங்ககரா கூறியது:

யுவராஜ் சிங் சிறப்பான கேப்டன் தான். பஞ்சாப் அணிக்காக கடந்த இரண்டு தொடர்களில் நல்ல பங்களிப்பை வழங்கியுள்ளார். பஞ்சாப் அணியின் முன்னேற்றத்துக்கு அவர் பெரும் உதவியாக இருப்பது உறுதி.

ஆனால் கேப்டன் பதவியில் இருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டது மற்றும் அதுகுறித்த செய்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு சங்ககரா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment