மும்பை டெஸ்டில் சூப்பராக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. தவிர தனது டெஸ்ட் வரலாற்றில் 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. ஆட்ட, தொடர் நாயகன் என விருதுகளையும் சேவக் வென்றார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
இன்னிங்ஸ், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர 1932ல் டெஸ்ட் விளையாட துவங்கிய இந்திய அணி, 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடம் பெற்றது.
தற்போது இந்தியா 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளது.
இப்போட்டியில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.
கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்
0 comments:
Post a Comment