டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறிய இந்திய அணிக்கு, இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது டில்லியில் நேற்று வழங்கப்பட்டது. இவ்விருதை இந்திய கேப்டன் தோனிக்கு, ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கட் வழங்கினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆண்டுதோரும் சிறந்த டெஸ்ட் அணிக்கு சாம்பியன்ஷிப் விருது வழங்கி கவுரவிக்கும். கடந்த 2008-09ம் ஆண்டுக்கான விருதை ஆஸ்திரேலிய அணி பெற்றது.
இந்த ஆண்டுக்கான (2009-10) விருது சமீபத்தில் டெஸ்ட் ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.
இதற்கான விழா டில்லியில் நேற்று நடந்தது. இவ்விழாவில் இந்திய கேப்டன் தோனி, சேவக், ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாரூன் லார்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை லார்கட், இந்திய கேப்டன் தோனியிடம் வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விருதை இந்திய அணி மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பாக நான் பெருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 14 மாதங்களாக இந்திய அணி கடுமையாக போராடி ரேங்கிங்கில் முதலிடத்துக்கு முன்னேறியதன்மூலம், தற்போது இவ்விருது கிடைத்தது. தொடர்ந்து ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக்கொள்ள, இனிவரும் போட்டிகளில் கூடுதல் திறமையை வெளிப்படுத்துவோம்.
அடுத்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்டில் விளையாட உள்ளோம். தவிர, தென் ஆப்ரிக்காவுடன் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இரு அணிகளின் கிரிக்கெட் போர்டுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனவே அடுத்த ஆண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்று டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்துவோம்.
ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமானது. ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் அன்றே முடிவு கிடைத்து விடும் என்பதால், அன்றைய தினம் முழுதிறமையை வெளிப்படுத்தினால் போதுமானது. டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே உள்ளது. ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் எழுச்சி கண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஷாந்த் சர்மா பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியின் பீல்டிங் சில நேரங்களில் தடுமாற்றம் அடைகிறது.
இதனை எளிதில் சரிபடுத்திவிடலாம். இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு துவக்க வீரர் சேவக்கின் அதிரடி ஆட்டம் ஒரு காரணம். இனிவரும் நாட்களிலும் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. விராத் கோஹ்லி, காம்பிர் போன்ற வீரர்கள் அசத்தி வருவதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.
இவ்வாறு தோனி கூறினார்.
0 comments:
Post a Comment