வெற்றியை தொடர்வாரா தோனி


இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் துவங்குகிறது. ""இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்,'' என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை மும்பையில் துவங்குகிறது.


சகோதரி திருமணத்துக்கு செல்வதால், இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் காம்பிர் கலந்து கொள்ளமாட்டார். முதல் இரண்டு டெஸ்டிலும் சதம் கடந்த இவர் இல்லாதது, அணிக்கு பெரும் பின்னடைவே. இவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கும் எனத்தெரிகிறது.


"நம்பர்-1' முக்கியமல்ல: மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில், முதல் முறையாக முதலிடத்தை கைப்பற்றும். இது இந்திய கிரிக்கெட்டுக்கும் சிறப்பான தருணமாக இருக்கும். 


இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" தொடர்ந்து எப்போதும் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். வீரர்கள் ரேங்கிங்கை மறந்து விட்டு போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் "நம்பர்-1' இடத்துக்கு வருவது என்பது முக்கியமல்ல. நமது வெற்றி நடையை எப்போதும் போல தொடர வேண்டும்,'' என்றார்.


முரளிதரன் ஏமாற்றம்: இலங்கை அணி, இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஆனால் ஒரு போட்டியிலாவது வென்றுவிட வேண்டும் என கடும் முயற்சி செய்து வருகிறது. 


இம்முறை அதிக எதிர்பார்பில் இங்கு வந்த அந்த அணிக்கு, பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க, பவுலர்கள் சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளிதரன் "சுழலில்' ஏமாற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் மோசமாக பந்து வீசினோம். இது தான் தொடரின் பின்னடைவுக்கு காரணம்,'' என்றார்.


சங்ககரா நம்பிக்கை: இது குறித்து இலங்கை அணி கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" முரளிதரன் இன்னும் சிறப்பான பவுலர் தான். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தியாவில் கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் அவர், 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவார் என நாங்கள் நம்புகிறோம். 


தொடரை வெல்ல முடியாவிட்டாலும் மும்பை போட்டியில் வென்று 1-1 என சமநிலைப்படுத்த முயற்சிப்போம். அது தான் எங்களின் பெரிய இலக்கு,'' என்றார்.

0 comments:

Post a Comment