ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி இன்று டில்லியில் நடக்கிறது. கடந்த இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இம்முறை "ஹாட்ரிக்' வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்த சோகத்தில் இருக்கும் இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக போராடலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக், கோல்கட்டா போட்டியில் அடுத்தடுத்து வென்ற இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி டில்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்க உள்ளது.

இளமை எழுச்சி:

காம்பிர், கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரெய்னா என இளம் வீரர்கள் எழுச்சியுடன் செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு பலம் அளிக்கிறது. கோல்கட்டாவில் நடந்த 4 வது ஒரு நாள் போட்டியில் காம்பிர், கோஹ்லி கூட்டணி வெற்றியை இந்தியா வசமாக்கியது. இன்றைய போட்டியிலும் இவர்கள் அசத்த காத்திருக்கின்றனர்.


வருகிறார் தோனி:

துவக்க வீரர்களான சேவக், சச்சின் நல்ல பார்மில் இருப்பது கூடுதல் பலம். சொந்த ஊரில் களமிறங்க உள்ள சேவக், மீண்டும் அதிரடி காட்டலாம். தாமதமாக பந்து வீசியது தொடர்பாக, இரண்டு போட்டிகளில் தடையை எதிர்கொண்ட தோனி, இன்றைய போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்கிறார். இவரது வருகை அணிக்கு பலம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஸ்ரீசாந்த் வாய்ப்பு?:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பாராட்டும் படியாக இல்லை. நெஹ்ரா, ஜாகிர் மட்டுமே ஆறுதல் அளிக்கின்றனர். தொடர்ந்து சொதப்பி வந்த இஷாந்த் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் அசோக் டின்டா தேர்வாகி உள்ளார்.

சுழலில் ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனர். பன்றிக் காய்ச்சலில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த் இடம் பெற வாய்ப்பு உள்ளது. பீல்டிங்கில் ஏமாற்றம் அளித்து வரும் இந்திய அணி, தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


தரங்கா அசத்தல்:

ஒரு நாள் தொடரை பரிதாபமாக இழந்துள்ள இலங்கை அணி, ஆறுதல் வெற்றியை நோக்கி இன்று களமிறங்குகிறது. துவக்க வீரரான தரங்கா "நல்ல பார்மில்' உள்ளார். கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த அதிரடி வீரர் தில்ஷன் இன்று அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.


காயம் சோகம்:

நட்சத்திர வீரர்களான ஜெயசூர்யா, ஜெயவர்தனா இருவரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். மாத்யூஸ், துஷாரா, பெர்னாண்டோ, வெலகேதரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளது இலங்கை அணிக்கு துரதிருஷ்டமாக அமைந்துள்ளது. தவிர பந்துவீச்சும் அவ்வளவாக எடுபடவில்லை. லக்மல், பெரேரா, மெண்டிசின் போன்றோர் இன்று துல்லியமாக பந்துவீசினால், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.


பெரிய அளவில் மாற்றமிருக்காது : தோனி

இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டதால், இன்றைய போட்டியை எளிதாக நினைக்க மாட்டோம். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு 4-1 என்ற கணக்கில் கோப்பை வெல்வோம். அணியில் ஒரு சில மாற்றங்களை தவிர, பெரிய அளவில் மாற்றமிருக்காது.

வலுவான அணியே களமிறங்கும். இந்திய அணி பீல்டிங்கில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. மற்றபடி பேட்டிங், பவுலிங்கில் பாராட்டும்படியாகவே உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் சேவக் அணியை சிறப்பாக வழிநடத்தினார். கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா இருவரும் தங்களது தேர்வை நியாயப்படுத்தி உள்ளார்கள். இவ்வாறு தோனி தெரிவித்தார்.


ஜெயசூர்யா "20':

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்து 20 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்தார் இலங்கையின் ஜெயசூர்யா. கடந்த 1989, டிச., 26ம் தேதி மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியில் 3 ரன் மட்டுமே எடுத்தார். இதற்கு பின் தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் அரங்கில் புரட்சி ஏற்படுத்தினார்.

கடந்த 1996 ம் ஆண்டு இலங்கை அணி உலககோப்பை கைப்பற்ற, முக்கிய காரணமாக இருந்தார். தற்போது 40 வயதான இவர் இதுவரை 443 ஒரு நாள் போட்டிகளில் 13397 ரன்களும், 322 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தவிர, 110 டெஸ்ட் போட்டிகளில் 6973 ரன்கள் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய இவருக்கு அணியின் கேப்டன் சங்ககரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 20 ஆண்டு கால கிரிக்கெட் அரங்கில் சாதித்த ஜெயசூர்யாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அணியில் அவருக்கு இன்றும் தனிச் சிறப்பு உண்டு. 1996 ம் ஆண்டு உலககோப்பையில் அவரது ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. ஒரு நாள் அரங்கில் 13 ஆயிரம் ரன்கள் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரர் ஜெயசூர்யா தான். இவ்வாறு சங்ககரா கூறினார்.

மைதானத்தில் இதுவரை...:

* டில்லி, பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்று 8 வெற்றி, 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

* இம்மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 3 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், இந்தியா 2, இலங்கை 1 வெற்றியை எட்டியுள்ளன.

* இங்கு பாகிஸ்தான் அதிகப்பட்ச ஸ்கோரை (303, எதிர்-இந்தியா, 2005) பதிவு செய்துள்ளது. இம்மைதானத்தில் இந்திய அணி குறைந்த பட்ச ஸ்கோரை (144, எதிர்-பாகிஸ்தான், 2005)எட்டியுள்ளது.

* இம்மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர் இந்தியாவின் சச்சின் (7 போட்டி 273 ரன்). அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் அகார்கர் (3 போட்டி 7 விக்.,).

* இந்திய அணி இம்மைதானத்தில் கடைசியாக, கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0 comments:

Post a Comment