இலங்கைக்கு எதிரான டுவென்டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் ஆர்.அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளும் 2 டுவென்டி 20 ஆட்டங்களிலும், 5 ஒரு தின ஆட்டங்களிலும் விளையாடுகின்றன.
அதற்கான அணியைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு மும்பையில் புதன்கிழமை கூடியது. கூட்டத்துக்குப் பின், டுவென்டி20 மற்றும் முதல் 2 ஒரு தின ஆட்டங்களுக்கான அணித் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் என்.சீனிவாசன் அறிவித்தார்.
இதில் டுவென்டி20 ஆட்டங்களுக்கான அணியில் தமிழக ஆல்ரவுண்டர் ஆர்.அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
2-வது டெஸ்டில் அபாரமாகப் பந்துவீசிய ஸ்ரீசாந்த் இரு அணிகளிலும் இடம் பிடித்துள்ளார்.
ஒரு தின ஆட்டங்களுக்கான அணியில் இடம் பெறாத இஷாந்த் சர்மா, டுவென்டி20 ஆட்டங்களுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச வீரர் சுதீப் தியாகி, தில்லி வீரர் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் அணியில் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோருக்கு டுவென்டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டுவென்டி20 ஆட்டம் டிசம்பர் 9-ல் நாகபுரியிலும், 2-வது ஆட்டம் டிசம்பர் 12-ல் மொஹாலியிலும், முதல் ஒரு தின ஆட்டம் டிசம்பர் 15-ல் ராஜ்கோட்டிலும், 2-வது ஆட்டம் டிசம்பர் 18-ல் விசாகப்பட்டினத்திலும் நடைபெறும்.
அணி விவரம்:
டுவென்டி20: தோனி (கேப்டன்), சேவாக், கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ், தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ஆர்.அஸ்வின், இஷாந்த் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த், அசோக் டிண்டா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, ரோஹித் சர்மா.
ஒரு தின ஆட்டம்: தோனி (கேப்டன்), சச்சின், சேவாக், கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகீர் கான், பிரவீண் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த், சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, விராட் கோலி.
0 comments:
Post a Comment