ஒரு நாள் தொடரில் சாதிக்குமா இந்தியா?

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி காத்திருக்கிறது.இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் கட்டமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

"டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சூப்பராக ஆட, இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. இதன் மூலம் தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று சாதித்தது. அடுத்து நடந்த "டுவென்டி-20' தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

ஆனாலும் மொகாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் இமாலய இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் "டுவென்டி-20' தொடரை 1-1 என சமன் செய்தது.

இறுதியாக 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. சேவக், காம்பிர், சச்சின், யுவராஜ், தோனி உள்ளிட்டோர் "சூப்பர் பார்மில்' இருப்பதால் இந்திய அணி வெற்றியுடன் துவக்க வாய்ப்பு உள்ளது.

டுவென்டி-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜாகிர் கான், ஹர்பஜன் அணிக்கு திரும்புவதால், பந்துவீச்சு பலம் பெற்றுள்ளது. டெஸ்ட் தொடர் தோல்விக்கு இலங்கை அணி பழிதீர்க்க காத்திருக்கிறது. ஆனாலும் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது எளிதான காரியமல்ல.


"நம்பர்-1' நோக்கி:
தற்போது ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 130 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க(119) மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தற்போதைய ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என வென்றால் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியாவை நெருங்கலாம். ஒருவேளை 1-4 என இழந்தால், 117 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவுக்கு அடுத்து இடத்துக்கு தள்ளப்படலாம்.


இலங்கை அணி 3-2 என வென்றால் தற்போதைய 7வது இடத்தில்(106) இருந்து முன்னேறி 6வது இடம் பெறலாம். ஒருவேளை 5-0 என முழுமையாக கைப்பற்றினால் 3வது இடத்தை பிடிக்கலாம்.


வெற்றியுடன் முடிப்போம்:
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியது:

இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணியினர் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து அபார ஆட்டத்தின் மூலம் எதிர்காலத்திலும் அசத்த முயற்சிப்போம். எங்கள் அணியின் சேவக், யுவராஜ் இருவரும் சிறந்த வீரர்கள். அவர்கள் எப்போது பேட்டிங் செய்தாலும், அதைப்பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கும்.

அது போல இலங்கைக்கு எதிராக நாளை துவங்க உள்ள ஒருநாள் தொடரில், கடினமான போராடி வென்று, இந்த ஆண்டினை வெற்றிகரமாக முடிக்க விரும்புகிறோம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த், விரைவில் குணமடைந்து திரும்ப, இறைவனிடம் வேண்டுகிறேன்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.


சச்சினுக்கு "சூப்பர்' வரவேற்பு
இந்திய வீரர்கள் ராஜ்கோட்டில் உள்ள இம்பீரியல் ஓட்டலில் தங்கியுள்ளனர். இங்கு சச்சினுக்கு விசேஷ "ரூம்' வழங்கப்பட்டுள்ளது. தவிர, இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 30 ஆயிரம் ரன்களை கடந்ததை கவுரவிக்கும் விதமாக 30 கி.கி., எடை கொண்ட பிரமாண்ட "கேக்' ஒன்றுக்கு "ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓட்டல் இயக்குனர் அதுல் சேத் கூறுகையில்,""மாஸ்டர் பெட் ரூம், இரண்டு பாத்ரூம், பெரிய உணவருந்தும் அறை கொண்ட சிறந்த "சூட் ரூம்' சச்சினுக்கு அளிக்க உள்ளோம். பொதுவாக இத்தகைய "ரூம்' கேப்டன்களுக்கு தான் வழங்கப்படும். சச்சினின் சாதனைக்காக இம்முறை இந்த விசேஷ "ரூம்' வழங்கியுள்ளோம்,'' என்றார்.


ஸ்ரீசாந்த் நல்ல முன்னேற்றம்
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்ஸ்ரீசாந்த், உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து போரிட்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் பானர்ஜி கூறுகையில்,"" இங்கு ஸ்ரீசாந்த், தனி வார்டில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

அவரது உடல் நிலையில் தற்போது சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் "டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்,'' என்றார்.

0 comments:

Post a Comment