முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா போராடி வெற்றி
இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விரட் கோலி இடம் பெற்றார்.
இலங்கை அணியில் காயம் காரணமாக முரளீதரனும், காய்ச்சல் காரணமாக மலிங்காவும் ஆடவில்லை. இலங்கை அணி கேப்டன் சங்ககரா `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் ஆட அழைத்தார். ஷேவாக்கும், தெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஷேவாக் வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார். குலசேகரா, பெர்னாண்டோ வீசிய ஓவர்களில் தலா 2 சிக்சர்கள் அடித்து ரசிகர்ளுக்கு விருந்து படைத்தார். ஜெயசூர்யா பந்தில் தெண்டுல்கர் தனது முதல் சிக்சரை அடித்தார். இருவரது அதிரடியான ஆட்டத்தால் ரன் மளமள என்று உயர்ந்தது.
இதனால் 14.3 ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தெண்டுல்கர் 69 ரன்னில் (63 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அவர் தனது 92 அரை சதத்தை அடித்தார். அப்போது ஸ்கோர் 153 (19.3) ஆக இருந்தது. அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார்.
மறுமுனையில் இருந்த ஷேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 98 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து 102 ரன்னை (66 பந்து) தொட்டார். இதில் 12 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும்.
212-வது ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஷேவாக்குக்கு இது 12-வது சதம் ஆகும். இலங்கைக்கு எதிராக 3-வது செஞ்சூரியை அடித்தார்.
இதே போல கேப்டன் டோனியும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். சிக்சர், பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார். இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 29.1 ஓவரில் 250 ரன்னை தொட்டது. டோனி 34 பந்தில் 50 ரன்னை (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஷேவாக்கும், டோனியும் தொடர்ந்து நன்றாக ஆடி னார்கள். 34.1-வது ஓவரில் இந்தியா 300-வது ரன்னை குவித்தது.
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷேவாக் 150-வது ரன்னை தவறவிட்டார். அவர் 146 ரன்னில் ஆட்டம் இழந்தார். 102 பந்தில் (17 பவுண்டரி, 6 சிக்சர்) இந்த ரன்னை எடுத்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஷேவாக்- டோனி ஜோடி 156 ரன் எடுத்தது. அடுத்து ரெய்னா களம் வந்தார்.
அடுத்தடுத்து `அவுட்' ஷேவாக் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் டோனியும் பெவிலியன் திரும்பினார். அவர் 53 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்தார். 5-வது வீரராக களம் இறங்கிய காம்பீர் 11 ரன்னில் `அவுட்' ஆனார்.
அடுத்து ரெய்னா 16 ரன்னிலும், ஹர்பஜன்சிங் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் 43.1 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 352 ரன் என்ற நிலையில் இருந்தது. கோலி 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 27 ரன் எடுத்தார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன் குவித்து சாதனை படைத்தது. ஜடேஜா 17 பந்தில் 2 சிக்சருடன் 30 ரன் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் இந்தியா குவித்த அதிக ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக இந்தியா 413 ரன் குவித்து இருந்தது. சர்வதேச அணிகளில் இது 5-வது மிகப்பெரிய ரன் ஆகும்.
பின்னர் 415 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தில்சானும் தாரங்காவும் களம் இறங்கினார்கள் இருவரும் தொடக்கம் முதல் அடித்து விளையாடினார்கள். தில்சானின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இலங்கை அணி 7.2 ஓவரில் 50 ரன்னை தொட்டது. தில்சான் 38 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இலங்கை அணி 12 ஓவரில் 100 ரன்னை தொட்டது. பின் தில்சான் 73 பந்தில் சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரியும் 1 சிக்சரும் அடங்கும். அப்போது இலங்கை அணி 20 ஓவரில் 158 ரன் எடுத்திருந்தது.
எதிர்முனையில் இருந்த தாரங்கா 51 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவருக்கு 10 ரன்னில் கேட்ச் பிடிக்க இந்திய வீரர்கள் தவறினர். இலங்கை அணியின் ஸ்கோர் 24 ஓவரில் 188 ரன் இருக்கும்போது தொடக்க ஜோடி பிரிந்தது. தாரங்கா 60 ரன்னில் ரெய்னா பந்தில் அவுட்டானார். அவரைத் தொடரந்து கேப்டன் சங்ககரா களம் இறங்கினார்.
இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை துவம்சம் செய்தனர். குறிப்பாக சங்ககரா ஒரு பாலுக்கு இரண்டு ரன் வீதம் சிக்சர் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இதனால் 414 ரன்னை சுலபமாக சேஸ் செய்வதுபோல் ரன் விகிதம் சென்றது. இலங்கை அணி இலங்கை அணி 36 ஓவரில் 300 ரன்னை கடந்தது. இலங்கை அணியில் ஸ்கோர் 316 ரன்னாக இருக்கும்போது சங்ககரா 90 ரன்னில் அவுட் ஆனார்.
அவர் இந்த ரன்னை 43 பந்தில் 10 பவுண்டரி 5 சிக்சருடன் அடித்தார். அடுத்து தில்சான் 160 ரன்னிலும், ஜெயசூர்யா 5 ரன்னிலும், ஜெயவர்த்தனே 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இலங்கை அணி 41 ஓவரில் 347 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்திருந்தது.
அடுத்து கந்தாம்பி மாத்யூஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். 401 ரன் இருக்கும்போது கந்தாம்பி 24 ரன்னி ரன் அவுட் ஆனார் அவரைத் தொடர்ந்து சமரவீரா களம் இறங்கினார். இவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டது.
முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. 2வது பந்தில் 2 ரன்னும் 3 பந்தில் 2 ரன்னும் எடுக்கப்பட்டது. 4வது பந்தில் மாத்யூஸ் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 5வது பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை நெக்ரா வீசினார். குலசேகரா எதிர்கொண்டார். கடைசி பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. இதனால் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment