இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மும்பையில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியா தயாராக உள்ளது. தவிர, டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதிக்கவும் காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் துவங்குகிறது.
"நம்பர்-1' வாய்ப்பு: இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதல் முறையாக முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது முதலிடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணி 2வது இடத்துக்கு தள்ளப்படும்.
வருகிறார் முரளி விஜய்: சகோதரி திருமணத்துக்கு செல்வதால், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் காம்பிர் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். முதல் இரண்டு டெஸ்டிலும் சதம் கடந்த இவர் இல்லாதது, அணிக்கு பின்னடைவு தான். இவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார்.
"டாப் ஆர்டர்' பலம்: கான்பூரில் அதிரடி சதம் அடித்த சேவக், இன்றும் நம்பிக்கை தரலாம். டிராவிட் மீண்டும் சதம் அடிக்கலாம். "டாப் ஆர்டரில்' லட்சுமண் மட்டும் தான் இன்னும் சதம் அடிக்காமல் உள்ளார். இந்தக்குறையை மும்பை டெஸ்டில் நீக்குவார் என எதிர்பார்க்கலாம். தவிர, யுவராஜ், தோனி ஆகியோரும் பின்வரிசையில் பொறுப்பான ஆட்டத்தை தருவார்கள் என நம்பப்படுகிறது.
ஜாகிர் கான் எதிர்பார்ப்பு: காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இரண்டு போட்டியிலும் எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. தனது சொந்தமண்ணில் இவர் எழுச்சி காணலாம். சுழலில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா நம்பிக்கை தந்தனர். இன்று அமித் மிஸ்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் பலம்: இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேகத்தில் வந்த இலங்கை அணிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இருப்பினும் மீண்டும் ஒருமுறை பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கும் பட்சத்தில், இங்கு முதல் டெஸ்ட் வெற்றியை பெற்று, தொடரை சமன் செய்யலாம். இதற்கு தில்ஷன், பரணவிதனா, கேப்டன் சங்ககரா, ஜெயவர்தனா உள்ளிட்ட வீரர்கள் உதவுவார்கள்.
கடைசி வாய்ப்பு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளிதரன் "சுழலில்' இலங்கை அணியை கைவிட்டது தான் தொடர் பின்னடைவுக்கு காரணம். இந்தியாவில் தனது கடைசி டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அவர் மும்பையில் சாதிக்க முயற்சிக்கலாம். வேகப்பந்து வீச்சில் தம்மிகா பிரசாத் காயம் குணமடையாததால், வெலகேதராவுடன் குலசேகரா அல்லது திலகரா பெர்ணான்டோ களமிறங்கலாம். மெண்டிஸ் அல்லது ஹெராத் இருவரில் ஒருவருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும்
0 comments:
Post a Comment