இன்னொரு தடவை சொன்னால்... *யுவராஜுக்கு சச்சின் எச்சரிக்கை

யுவராஜ் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார் சச்சின். தன்னை மீண்டும் ஒரு முறை தாத்தா என அழைத்தால், யுவராஜின் பட்டப்பெயர்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். தொடர்ந்து 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 36 வயதான இவர் தான் அணியின் சீனியர் வீரர். இதையடுத்து "டிரஸ்சிங் ரூமில்' சக வீரர்கள் சச்சினை செல்லமாக தாத்தா என அழைப்பதாக சமீபத்தில் யுவராஜ் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதனை கேட்டு சச்சின் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

என்னை தாத்தா என அழைப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரு முறை சிந்திக்கும்படி யுவராஜை எச்சரித்துள்ளேன். ஏனென்றால் அவருக்கு நானும் நிறைய பட்டப்பெயர் வைத்துள்ளேன். அவற்றை "டிவி கேமரா' முன் தற்போது வெளியிட விரும்பவில்லை. எனது எச்சரிக்கையை பின்பற்ற இன்னொரு வாய்ப்பு அளித்துள்ளேன். இதனை மீறினால், அவரது பட்டப் பெயர்களை வெளியிட நேரிடும்.


எனது வழிகாட்டி:
கிரிக்கெட்டில் 21 ஆண்டுகளாக நீடிக்க எனது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர். எனது அப்பா சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவரது மறைவு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. மனைவி அஞ்சலியும் ஆதரவாக உள்ளார். எனக்காக டாக்டர் பணியை தியாகம் செய்தார். நான் பொதுவாக எதையும் முகத்தில் வெளிப்படையாக காட்ட மாட்டேன். ஆனாலும் நான் என்ன சொல்ல நினைக்கிறேன், என்ன உணர்கிறேன், எதை சிந்திக்கிறேன் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் அஞ்சலியின் சிறப்பம்சம்.


கங்குலி துணிச்சல்:
கேப்டன் என்ற முறையில் கங்குலி மற்றும் தோனியை ஒப்பிடுவது மிகவும் கடினம். இருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு. களத்தில் துடிப்பாக செயல்படக் கூடியவர்கள். ஆனாலும் "ஸ்டைல்' மட்டும் வேறுபடும். தோனி மிகவும் "கூலாக' இருப்பார்.

கங்குலி உடல் அளவிலும் ஆக்ரோஷமாக இருப்பார். போட்டிகளின் போது கங்குலி மிகச் சரியான முடிவுகளை எடுப்பார். இவர் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். கடந்த 2001ல் இந்திய அணி அன்னிய மண்ணில் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதற்கு கங்குலி முக்கிய காரணமாக இருந்தார்.

வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அணி சிறப்பாக செயல்பட வேண்டும். ஒரு அணி 150 அல்லது 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி விட்டால், சிறந்த கேப்டனாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு சச்சின் கூறினார்.


அண்ணன் "பார்முலா'
சச்சின் ஆடும் போட்டிகளை அவரது அண்ணன் அஜித் "டிவி'யில் நேரடியாக பார்க்க மாட்டாராம். இது குறித்து சச்சின் கூறுகையில்,""நான் விளையாடும் நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் வெளியில் சென்று விடுவார் அஜித்.

அங்கு ரேடியோ உட்பட எதுவும் இருக்காது. பின் வீட்டுக்கு வந்து போட்டியின் "வீடியோவை' பார்ப்பார். தினமும் மாலை நேரத்தில் அவருடன் பேசுவேன். அப்போது போட்டியில் நான் செய்த தவறுகள், முன்னேற்றம் காண என்ன செய்ய வேண்டும் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிப்போம். இந்த "பார்முலாவை' பள்ளி நாட்களில் இருந்து தற்போது வரை தொடருகிறேன்,'' என்றார்

0 comments:

Post a Comment