அனுபவம் தான் வெற்றிக்கு காரணம்: ஜடேஜா

தியோதர் டிராபி தொடருக்காக கட்டாக் மைதானத்தில் விளையாடியது நல்ல அனுபவமாக அமைந்தது. அந்த அனுபவம் தான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சாதிக்க உதவியது,'' என, ரவிந்திர ஜடேஜா தெரிவித்தார்


இந்தியா, இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று முன் தினம் கட்டாக்கில் நடந்தது. இப்போட்டியில் சுழலில் அசத்திய இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அணியின் வெற்றிக்கு வித்திட்ட இவர், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

தனது செயல்பாடுகள் குறித்து ஜடேஜா கூறியது: கட்டாக், பாரபதி மைதானம் எனக்கு மிகவும் ராசியானது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தியோதர் டிராபி தொடருக்காக மூன்று போட்டிகளில் இம்மைதானத்தில் விளையாடினேன். அது நல்ல அனுபவமாக அமைந்தது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீச முடிந்தது.

இப்போட்டியில் இலங்கை வீரர் உபுல் தரங்கா, சிறப்பாக விளையாடி கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் என்னிடம் வந்த சேவக்," சிறப்பாக பந்து வீசுமாறு' அறிவுறுத்தினார்.

ஆடுகளம் பந்து வீச்சுக்கு நல்ல முறையில் ஒத்துழைத்த நிலையில், துல்லியமாக பந்து வீசி தரங்கவை அவுட்டாக்கினேன். 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றது மகிழ்ச்சி அளித்தது. இருப்பினும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.


தற்போது தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளோம். கோல்கட்டாவில் நடக்க உள்ள 4 வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம். இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

0 comments:

Post a Comment