இந்திய வீரர்களின் மோசமான பீல்டிங்

இந்திய வீரர்களின் பீல்டிங் தொடர்ந்து மோசமாக இருந்து வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் பல கேட்ச்களை தவற விட்டனர். 2-வது 20 ஓவர் போட்டியிலும் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. 6 கேட்ச்களை தவற விட்டனர்.

மோசமான பீல்டிங்கினால் கேப்டன் டோனி வேதனை அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எந்த ஒரு அணியும் 6 கேட்ச்களை தவற விட்டதை நான் பார்த்தது கிடையாது. 20 ஓவர் போட்டி மட்டுமில்லை, ஒரு நாள் போட்டியிலும் இந்திய வீரர்களின் பீல்டிங் மற்றும் பந்து வீச்சு சில சமயங்களில் மோசமாக இருக்கிறது.

20 ஓவர் போட்டியில் உலகின் சிறந்த அணியாக நாம் திகழ்கிறோம். ஆனால் பந்து வீச்சு, பீல்டிங்கில் முன்னேற்றம் இல்லை. இரண்டிலும் முன்னேற்றம் தேவை. இதை சரி செய்யா விட்டால் எதிர் அணியை தோற்கடிப்பது கடினம். பேட்டிங்கை நம்பியே உள்ளோம்.

207 ரன் என்பது கடினமான இலக்கு. ஷேவாக் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். நாக்பூர் போட்டியை போல் அல்லாமல் நாங்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். யுவராஜ் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்.

இலங்கை வீரர்களும் பல கேட்ச்களையும், ரன் அவுட்களையும் தவற விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கேப்டன் சங்ககரா கூறும்போது 206 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் பல கேட்ச், ரன் அவுட்களை தவற விட்டோம். ஷேவாக், யுவராஜ், டோனி ஆகியோர் அதிரடியாக விளையாடிவிட்டனர் என்றார்.

சங்ககரா தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த வெற்றி மூலம் 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

0 comments:

Post a Comment