புது சர்ச்சை கிளப்பினார் தோனி


இந்திய கேப்டன் தோனியின்  வேண்டுகோளுக்கு ஒத்துழைக்காத ஈடன் கார்டன் ஆடுகள பராமரிப்பாளர் மாற்றப்பட்டார். இதனால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் ஆடுகளம் குறித்து தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. ஆமதாபாத் டெஸ்டில் "சுழலுக்கு' ஆடுகளம் ஒத்துழைக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. 

ஆனாலும், ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என தோனி புகார் கூறினார். மும்பை போட்டிக்கு, பந்து முதல் நாளில் இருந்தே சுழலுமாறு ஆடுகளம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. 

இருப்பினும், தனது நிலையை மாற்றிக் கொள்ளாத தோனி, கோல்கட்டாவில் நடக்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும், முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதற்கு ஈடன் கார்டன் ஆடுகள தயாரிப்பாளர் பிரபிர் முகர்ஜி, 83, "எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுக்க வேண்டும்,' எனக் கேட்டுள்ளார். 

தோனிக்கு ஆதரவு:

இவ்விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), தோனிக்கு ஆதரவாக களமிறங்கியது. பிரபிர் முகர்ஜிக்குப் பதில், கிழக்கு மண்டல தயாரிப்பாளர் ஆஷிஸ் பவுமிக்கை ஆடுகள பரமாரிப்பாளராக நியமிக்குமாறு, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை (சி.ஏ.பி.,), கேட்டுக்கொண்டது.

திரிபுரா கிரிக்கெட் சங்க (டி.சி.ஏ.,) செயலர் அரிந்தம் கங்குலி கூறுகையில்,"" பி.சி.சி.ஐ., உத்தரவுப்படி பவுமிக் சென்றுள்ளார். மற்றபடி, முகர்ஜிக்குப் பதில் இவர் நியமிக்கப்படுகிறாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை,'' என்றார்.

வழக்கமான ஒன்று:

சி.ஏ.பி., இணைச்செயலர் சுஜான் முகர்ஜி கூறுகையில்,"" ஒவ்வொரு போட்டி நடக்கும் முன்பும், ஆடுகளம் எப்படி உள்ளது என்பதை பார்க்க, மற்றவர்கள் வருவது வழக்கமானது தான். பிரபிர் முகர்ஜி ஆடுகள தயாரிப்பாளராக தொடர்கிறார். உள்ளூர் அணிக்கு சாதகமாகத் தான் ஆடுகளம் அமைக்கப்படும்,'' என்றார். 

தவறான செய்தி:

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" அனைத்து ஆடுகள தயாரிப்பாளர்களும் சுதந்திரமாக பணி செய்கின்றனர். இதில் தோனி தலையிடுகிறார் என்பது தவறானது. யாருடைய அறிவுரைப்படியும் எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை. பி.சி.சி.ஐ., மைதான மற்றும் ஆடுகள கமிட்டி இதுகுறித்து முடிவு செய்யும்,'' என்றார்.

0 comments:

Post a Comment