இந்திய வீரர் சேவக், தனது 100வது டெஸ்டில் சதம் அடிக்க வேண்டும்,'' என, கபில்தேவ், வெங்சர்க்கார் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. இதுவரை 99 டெஸ்டில் விளையாடியுள்ள இவர், 23 சதம், 32 அரைசதம் உட்பட 8488 ரன்கள் எடுத்துள்ளார்.
இவர், வரும் 23ம் தேதி மும்பையில் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் களமிறங்கும் பட்சத்தில், 100வது டெஸ்டில் பங்கேற்பார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 117 ரன்கள் எடுத்து அசத்திய இவர், தனது 100வது டெஸ்டிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 100வது டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைக்கலாம்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறுகையில், ""சேவக் போல திறமையான இளம் வீரர்கள் நிறைய உருவாக வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க முடியும். இவர், தனது 100வது டெஸ்டில் சதம் அடித்து சாதிக்க வேண்டும்,'' என்றார்.
முன்னாள் இந்திய கேப்டன் வெங்சர்க்கார் கூறுகையில், ""சேவக், 100வது டெஸ்டில் விளையாட இருப்பது புதிய மைல்கல். இவரது ரசிகர்களில் நானும் ஒருவன் எனக் கூறுவதில் பெருமை அடைகிறேன்.
இவர், தனது 100வது டெஸ்டில் நிச்சயம் சதம் அடிப்பார் என நம்புகிறேன். டிராவிட், லட்சுமண் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், இவரது "பேட்டிங் ஸ்டைலை' மாற்றிக் கொள்ள தேவையில்லை,'' என்றார்.
சேவக் தனது முதல் டெஸ்டில் சதம்(105, எதிர், தென் ஆப்ரிக்கா, புளோம்போன்டீன், 2001) அடித்தார். இதே போல நூறாவது டெஸ்டிலும் சாதிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment