இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்கள்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்கள்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஆமதாபாத்தில் துவங்குகிறது. 

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் அஜித் வடேகர் கூறியது: கடந்த 1993ம் ஆண்டு இந்தியா வந்த கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மேனேஜராக டங்கன் பிளட்சர் இருந்தார். 

இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என மோசமாக இழந்தது. 

இத்தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களான அனில் கும்ளே, வெங்கடபதி ராஜு, ராஜேஷ் சவுகான் மொத்தம் 46 விக்கெட் கைப்பற்றினர். இதில் அனில் கும்ளே 21, ராஜு 16, சவுகான் 9 விக்கெட் வீழ்த்தினர்.

இதேபோல தற்போது இந்தியா வந்துள்ள அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் சுழலை சமாளிக்க முடியாமல் திணறும் என நம்புகிறேன். 

ஏனெனில் இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணியில் அஷ்வின், பிரக்யான் ஓஜா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என வெவ்வேறு விதமாக சுழற்பந்துவீசக் கூடிய திறமையான பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரகாம் கூச் உள்ளார். இவர், இங்கிலாந்து வீரர்களுக்கு தனது முந்தைய அனுபவத்தை எடுத்துக் கூறுவார். இருப்பினும் இந்திய அணியில் திறமையான பவுலர்கள் இருப்பதால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அஜித் வடேகர் கூறினார்.

0 comments:

Post a Comment