கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமையலிலும் சச்சின் ஒரு "மாஸ்டர்' தான். பல்வேறு நாடுகளுக்கு சென்று விதவிதமான உணவுகளை ருசித்த இவர், சமையல் கலையிலும் கில்லாடியாம்.
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின், 39. மும்பையில் நடந்த சமையல் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இவர், தனது "உணவு' அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது சச்சின் கூறியது:
சமையல் செய்யும் போது என் மனம் சற்று "ரிலாக்ஸ்' ஆகும். 1997 அல்லது 98 என நினைக்கிறேன், டில்லியில் உள்ள அஜய் ஜடேஜாவின் வீட்டில் இந்திய வீரர்கள் அனைவரும் "டின்னருக்கு' ஆஜராயிருந்தனர். அரைமணி நேரம் முன்னதாக சென்ற நான், புரோட்டா செய்து அனைவருக்கும் வழங்கினேன்.
மனைவி பாராட்டு:
என் குடும்பத்துக்காக விசேஷ நாட்களில் சமைப்பது உண்டு. எனது அம்மாவிடம் இருந்து மீன் வறுவல் சமைக்கும் கைப்பக்குவத்தை கற்றேன். மனைவி அஞ்சலிக்கு ஒரு முறை செய்தும் கொடுத்தேன். அதை ஆர்வமாக ருசித்த அவர்,""வாழ்க்கையில் சாப்பிட்ட மிகச் சிறந்த மீன் வறுவல்,'' என, வாயார பாராட்டினார்.
காட்டில் சமையல்:
எனது 16வது வயதில் பாகிஸ்தான் சென்ற போது, அங்குள்ள உணவுகள் பிடித்து போக, நிறைய சாப்பிட்டேன். இதனால் என் எடை அதிரித்தது. கடந்த 2000ல் ஜிம்பாப்வே சென்ற போது, ஒருமுறை காட்டுப்பகுதிக்குள் சென்றோம். தேவையான உணவுகளை நாங்களே சமைத்தோம்.
மசாலா தடவிய கோழியை, கம்பி அடுப்பில் (தந்தூரி சிக்கன்) வேகவைத்து சாப்பிட்டது நன்றாக இருந்தது. காட்டுப்பகுதியில் சக வீரர்களுடன் இப்படி சமைத்து சாப்பிட்டது, எங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.
தெருவில் சாப்பாடு:
ஒருமுறை தென் ஆப்ரிக்காவில் பெற்ற வெற்றியை பெரியளவில் கொண்டாட நினைத்தோம். மாலையில் அனைவரும் அங்குள்ள தெருக்களில் ஒன்றாக சென்றோம், சாலையிலேயே சாப்பிட்டோம்.
ரெய்னா அறிமுகம்:
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜப்பானிய நண்பர் ஒருவரது ஓட்டலுக்கு ரெய்னாவை அழைத்துச் சென்றேன். ஜப்பானிய <உணவுகளை அறிமுகம் செய்கிறேன் என, மகிழ்ச்சியுடன் கூறினேன். அந்தநேரத்தில் "பிரைடு ரைஸ்' (பூண்டு கலந்தது), "சாஸ்மி', "சுஷி' வகை உணவுகளை விரும்பி சாப்பிட்டார்.
நத்தை உணவு பிடிக்காது
ஒருமுறை மனைவியின் வற்புறுத்தலின் பேரில், பூண்டு குழம்புடன் கலந்த, நத்தைக் கறி சாப்பிட முயற்சித்தேன். இதை சாப்பிடவே பிடிக்கவில்லை. செரிமானம் ஆவதும் சிரமம். மீண்டும் ஒருமுறை அதைத் தொடவில்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்
"ஐஸ் கிரீம்' தான் "லஞ்ச்'
கடந்த 2003ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர் ஆகிய "வேகப்புயல்களை' சமாளிக்க வேண்டிய "டென்ஷனில்' இருந்த சச்சின், மதிய உணவை தவிர்த்து "ஐஸ்கிரீம்' மட்டும் சாப்பிட்டாராம். இதில் 75 பந்தில் 98 ரன்கள் எடுத்த இவர், இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
இது குறித்து சச்சின் கூறுகையில்,""இப்போட்டியின் உணவு இடைவேளையின் போது, பெரிய கிண்ணத்தில் "ஐஸ் கிரீம்' மட்டும் சாப்பிட்டேன். அம்பயர்கள் களத்தில் இறங்கும் போது சொல்லுங்கள் என, சக வீரர்களிடம் கூறிவிட்டு, காதில் "ஹெட் போனை' மாட்டிக்கொண்டேன். யாரிடமும் எதுவும் பேசவில்லை. அப்போது "ஐஸ் கிரீம்' மட்டுமே போதுமானதாக இருந்தது,''என்றார்.
0 comments:
Post a Comment