ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடிக்கும்,'' என, இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை பறிகொடுத்தது. தற்போது 106 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று முதல் நவ. 11ம் தேதி வரை மூன்று நாள் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
இந்திய கேப்டன் தோனி கூறியது: டெஸ்ட் ரேங்கிங்கில் மீண்டும் முதலிடம் பிடிக்கும் எண்ணம் இந்திய அணிக்கு எப்போதுமே உள்ளது. டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' என எவ்வித போட்டியாக இருந்தாலும், "நம்பர்-1' இடம் பிடிப்பதே இலக்கு.
இதற்காக ஒவ்வொரு போட்டியிலும் திட்டமிட்டு விளையாடி வருகிறோம். "நம்பர்-1' இடம் பிடிப்பதற்கான எங்களது முயற்சி மெதுவாக இருந்தாலும், முடிவில் இலக்கை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இங்கிலாந்து அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் பலம், பலவீனம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.
டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் இணைந்து பயிற்சி முகாமில் பங்கேற்க இருப்பது கூடுதல் பலம். இதன்மூலம் ஒரு அணியாக இணைந்து போட்டியில் சாதிக்க முடியும்.
இதேபோல தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் சமீபத்தில் உள்ளூர் மற்றும் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டிருப்பதால் "பார்ம்', உடற்தகுதி குறித்த கவலை இல்லை.
சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த நான், கிரிக்கெட் போட்டியில் தொழில் ரீதியாக விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை. சிறு வயதில் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதை இலக்காக கொண்டிருந்தேன்.
இது தான் என்னுடைய இளமை கால கனவு. கிரிக்கெட் போட்டியில் காலடி வைத்த பின் எல்லாமே மாறிவிட்டது. துவக்கத்தில் முதல் தர, துலீப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், தேசிய அணியில் இடம் கிடைத்தது.
இவ்வாறு தோனி கூறினார்.
0 comments:
Post a Comment