டெஸ்ட் அணி இன்று அறிவிப்பு - வருகிறார் யுவராஜ்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில், யுவராஜ் சிங் மீண்டும் இடம் பிடிப்பார் என தெரிகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 15ம் தேதி ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணியை சந்தீப் படேல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு இன்று அறிவிக்க உள்ளது. 

இதில், "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இவரது உடற்தகுதி குறித்து கேப்டன் தோனி கேள்வி எழுப்பிய போதும், முதல் தர போட்டிகளில் தனது திறமை நிரூபித்து தேர்வாளர்களை கவர்ந்துள்ளார். 

துலீப் டிராபி போட்டியில் இரட்டைசதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து "லெவன்' அணிக்கு எதிரான சமீபத்திய பயிற்சி போட்டியிலும் மிரட்டிய இவர், அரைசதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்தி "ஆல்-ரவுண்டராக' ஜொலித்தார். இதையடுத்து 6வது பேட்ஸ்மேன் இடத்தை பூர்த்தி செய்யலாம். 

இவருக்கு ரெய்னா கடும் போட்டியை தரக் கூடும். இங்கிலாந்து "லெவன்' அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட்ட ரெய்னா, இரண்டு இன்னிங்சிலும் (20, 19) சொதப்பினார். இதனால் வாய்ப்பு மறுக்கப்படலாம். புஜாரா, ரகானேவும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 

சாவ்லா வாய்ப்பு: 

சுழற்பந்துவீச்சாளர்கள் அஷ்வின், பிரக்யான் ஓஜா தங்களது இடத்தை ஏற்கனவே தக்கவைத்துள்ளனர். மூன்றாவது வீரருக்கு கடந்த 2008ல் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பியுஸ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் இடையே போட்டி காணப்படுகிறது. 

ஜாகிர் கான், உமேஷ் யாதவ், இஷாந்த சர்மா போன்ற "வேகங்கள்' அணியில் இடம் பெற காத்திருக்கின்றனர். 

நாலு பேருக்கு காயம்

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் சேவக், ஜாகிர் கான் காயம் அடைந்திருப்பது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியில் இருவர் சேர்த்து இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

சேவக்(விரலில் காயம்):

 ரஞ்சி கோப்பை போட்டியில் டில்லி அணிக்காக விளையாடும் சேவக்கின் வலது கை ஆள்காட்டி விரலில், பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று துவக்கத்தில் களமிறங்கிவில்லை. 6வது வீரராக வந்த இவர் வழக்கம் போல் "பேட்' செய்தார். இவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது நல்ல விஷயம்.

ஜாகிர் கான்(இடுப்பில் பிடிப்பு):

ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடும் ஜாகிர் கான் நேற்று தனது 21வது ஓவரை வீசினார். அப்போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் கடைசி பந்தை வீசாமல், பெவிலியன் திரும்பினார். இவரது ஓவரை அபிஷேக் நாயர் முடித்தார். வெறும் பிடிப்பு என்பதால், ஜாகிர் விரைவில் தேறிவிடுவார் என எதிர்பார்ப்போம்.

ஸ்டீவன் (தொடையில் பிடிப்பு):

இந்தியா "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின்னுக்கு வலது தொடைப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்பு முயற்சியாக, ஸ்டூவர்ட் மியாக்கருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது. ஒருவேளை ஸ்டீவன் காயத்தில் இருந்து மீளவில்லையெனில் மியாக்கர், அணியில் இடம் பெறுவார்.

ஸ்டூவர்ட் பிராட் (இடது குதிகாலில் காயம்):

மும்பை "ஏ' அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்தின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடது குதிகாலில் காயம் ஏற்பட்டது. தேநீர் இடைவேளைக்கு பின் இவர் பந்துவீசவில்லை. இவருக்கு "ஸ்கேன்' எடுத்து பார்க்கப்பட்டது. நவ.8ல் துவங்கும் அரியானா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.

0 comments:

Post a Comment