இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் தோனி நீடிக்கலாம். ஆனால் விரைவில் இவரது சுமையை குறைக்க வேண்டும்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலிப்பவர் தோனி. இவரது தலைமையில் கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை இழந்தது. இதனால் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின.
இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் கூறியது: தோனி சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இவரது செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு நிறைய போட்டிகளில் கைகொடுத்துள்ளது. இவரை தொடர்ந்து சிறந்த வீரராகவே காண விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம், இவரது கேப்டன் பொறுப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறவில்லை.
ஏனெனில் அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் இதற்கான நேரம் இதுவல்ல. இருப்பினும் விரைவில் இவரது கேப்டன் சுமையை ஏதாவது ஒரு போட்டியில் இருந்து குறைக்க வேண்டும். இதன்மூலம் இவர் போட்டியில் நெருக்கடியின்றி விளையாடலாம். தவிர இவர், மீண்டும் சிறந்த வீரராக அசத்தலாம்.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து தோனி மட்டுமே முடிவு செய்ய முடியும். ஏனெனில் இவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றது. டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை அடைந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு மோசமான தோல்வி கண்டது இவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.
அடுத்த கேப்டன் பொறுப்புக்கு விராத் கோஹ்லி தகுதியானவர் என நினைக்கிறேன். இவர், அடுத்த 12 மாத காலத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஏனெனில் ரசிகர்கள் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
0 comments:
Post a Comment