ஐ.பி.எல்., அமைப்புக்கு ஜாக்பாட்


அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஐ.பி.எல்., தொடருக்கான "டைட்டில் ஸ்பான்சர்' உரிமையை பெப்சி நிறுவனம் தட்டிச் சென்றது. இதற்காக ரூ. 396.8 கோடி வழங்குகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், "டுவென்டி-20' போட்டிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. இதன் "டைட்டில் ஸ்பான்சராக' டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) நிறுவனம் இருந்தது. 

இதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (ஐ.பி.எல்.,) அதிக தொகை எதிர்பார்த்தது. இதனால், டி.எல்.எப்., நிறுவனம் விலகியது. புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதற்கான கடைசி நாளான நேற்று ஏர்டெல் (ரூ. 316 கோடி), பெப்சி என, இரு நிறுவனங்கள் மட்டும் உரிமை கோரின. இதில் அதிக தொகைக்கு (ரூ. 396.8 கோடி) ஏலம் கேட்ட பெப்சி, 2017ம் ஆண்டு வரையிலான "ஸ்பான்சர்ஷிப்' உரிமையை பெற்றது.

இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடர்பான எவ்வித ஏலமும், சிறப்பாகவே விற்பனை ஆகியுள்ளன. பெரும்பாலும் இரண்டு, மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகத்தான் விற்றன. இது மீண்டும் நிரூபணம் ஆனது,'' என்றார்.

இதுகுறித்து பெப்சிகோ மார்கெட்டிங் தலைமை இயக்குனர் தீபிகா வாரியர் கூறுகையில்,"" கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் கிரிக்கெட்டுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இப்போது மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. <உலகின் மற்ற எந்த விளையாட்டுகளையும் விட, ஐ.பி.எல்., சிறப்பானது,'' என்றார்.

ஜனவரியில் வீரர்கள் ஏலம்

 ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 2013, ஜனவரி 12ல் சென்னை அல்லது 8 நாட்கள் கழித்து கோல்கட்டாவில் நடக்கலாம் எனத் தெரிகிறது. 

மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முதல் (2008) ஐ.பி.எல்., தொடருக்குப் பின், அடுத்த நான்கு ஆண்டுகள் பங்கேற்காத பாகிஸ்தான் வீரர்களுக்கு இம்முறை அனுமதி கிடைக்கலாம். 

0 comments:

Post a Comment