பாக்., வீரர்களுக்கு தடை - பி.சி.பி., எச்சரிக்கை


இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் தனியார் "பார்ட்டி'களில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தடை விதித்துள்ளது.

கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. பல்வேறு முயற்சிகளுக்கு பின், மத்திய அரசு ஒருவழியாக அனுமதி அளிக்க, பாகிஸ்தான் அணி, இம்மாதம் இந்தியா வருகிறது.

தற்போதைய இங்கிலாந்து தொடருக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நாட்களில் (டிச., 23 - ஜன.,6) இரு அணிகளும் 2 "டுவென்டி-20', 3 ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதற்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. 

இதன்படி 2 "டுவென்டி-20' போட்டிகள் பெங்களூரு (டிச. 25), ஆமதாபாத் (டிச. 27) மைதானங்களில் நடக்கவுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் சென்னை (டிச. 30), கோல்கட்டா (2013, ஜன. 3), டில்லி (2013, ஜன. 6) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. இம்மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க பி.சி.பி., செய்தி தொடர்பாளர் நதீம் சர்வார், பாதுகாப்பு மற்றும் காவல் துறை தலைவர் ஈஷான் சாதிக் ஆகியோர் அடங்கிய குழு இந்தியா வந்துள்ளது.

இதுகுறித்து நதீம் சர்வார் கூறியது: இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் வீரர் தனியார் "பார்ட்டி'களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல வீரர்கள் தங்கவுள்ள ஓட்டலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. 

வீரர்களை பார்க்க, அவர்களது உறவினர், நண்பர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் போது பின்பற்ற பட்ட அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பாகிஸ்தான் வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு சார்பில் நடத்தப்படும் சிறப்பு விருந்தில் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மற்றும் போட்டி முடிந்த பின், வீரர்கள் அனைவரும் நேராக ஓட்டலுக்கு வந்துவிட வேண்டும். 

"ஷாப்பிங்', "பார்ட்டி' உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல போட்டிகளை காண வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நதீம் சர்வார் கூறினார்.

0 comments:

Post a Comment