இங்கிலாந்து அணியை பழி வாங்குவோம்- யுவராஜ்சிங்


இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்று “ஒயிட்வாஷ்” ஆனது. தற்போது கூக் தலைமை யிலான இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 15-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. 

இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் பழிவாங்கும் தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கிலாந்துக்கு இந்திய அணி இந்த தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இங்கிலாந்து அணியை பழிவாங்குவோம் என்று இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான யுவராஜ்சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

கடந்த ஆண்டு நாங்கள் இங்கிலாந்து சென்றபோது எங்களுக்கு கடினமான நேரமாக இருந்தது. இந்த முறை இங்கிலாந்து அணிக்கு அதே நிலை ஏற்படலாம். கண்டிப்பாக எங்களுக்கு இது பழிவாங்கும் தொடர் தான். அந்த அணியை வழிவாங்க இதுவே சரியான நேரம். 

இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் நாங்கள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளோம். இது ஒரு சிறந்த தொடராக இருக்கும். நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய உடல் நிலையுடன் இருக்கிறேன். 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடியது எனக்கு சவாலாக இருந்தது. டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை எப்போதுமே விரும்புகிறேன். 

இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார். 

புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த யுவராஜ் இலங்கையில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார். துலீப் டிராபியில் இரட்டை சதமும், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாலும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. 

ரெய்னா நீக்கப்பட்டு அந்த இடத்தில் யுவராஜ் சேர்க்கப்பட்டார். அவர் 6-வது வீரராக களம் இறங்குவார். ஒரு ஆண்டு இடை வேளிக்கு பிறகு யுவராஜ் டெஸ்டில் விளையாடுகிறார். கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்டில் விளையாடினார்.

0 comments:

Post a Comment