இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை அரையிறுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக வெளியான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது.
கடந்த 2011ல் மொகாலியில் நடந்த உலக கோப்பை(50 ஓவர்) அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதில், கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக இங்கிலாந்து பத்திரிகையாளர் எட் ஹாக்கின்ஸ் எழுதியுள்ள புத்தகத்தில் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இப்போட்டியில், "இந்திய அணி முதலில் "பேட்' செய்து 260 ரன்கள் எடுக்கும். பின் பாகிஸ்தான் அணி 150 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழக்கும்.
20 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வி அடையும்,' என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்திய ஏஜன்ட் ஒருவர் "டுவிட்டர்' மூலம் தனக்கு அனுப்பியதாகவும், அதன்படியே போட்டியின் பெரும்பாலான நிகழ்வுகள் அமைந்ததாகவும் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மறுத்த இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் கூறுகையில்,""பொதுவாக பத்திரிகை செய்திகளுக்கு நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனாலும், தற்போதைய செய்தி உண்மைக்கு புறம்பாக உள்ளது. இந்திய அணி கடினமாக உழைத்து பெற்ற வெற்றியை அவமதிக்கும் வகையில் இருக்கிறது,''என்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில்,""வெற்றிகரமாக நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் அரையிறுதி தொடர்பாக சந்தேகம் கிளப்புவது கவலை அளிக்கிறது. இது பற்றி விசாரணை நடத்த போதிய ஆதாரம் இல்லை,''என்றார்.
பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் கூறுகையில்,""அடுத்து நடக்க உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருக்கு பாதிப்பு ஏற்படுத்தவே இத்தகைய புகார்கள் கூறப்படுகின்றன.
பரபரப்பான உலக கோப்பை அரையிறுதியில் இரு அணிகளுமே கடினமாக போராடின,''என்றார்.
0 comments:
Post a Comment