இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8448 ரன்கள் குவித்துள்ளார்.
கடைசியாக அகமதாபாத்தில் அவர் விளையாடிய 99-வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் 23-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி சேவாக்கிற்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த போட்டியில் சேவாக் சதம் அடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கபில்தேவ், வெங்சர்க்கார் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
யுவராஜ்சிங் பற்றிய புத்தக வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற கபில்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘சேவாக் போன்ற அதிக வீரர்கள் அணியில் இருக்க வேண்டும்.
அவர் போன்ற வீரர்களால் டெஸ்ட் போட்டிக்கு அதிக ரசிகர்களை கொண்டு வர முடியும். எனவே, அவர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்’ என்றார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் கேப்டனுமான திலிப் வெங்சர்க்கார் கூறும்போது, ‘நான் சேவாக்கின் மிகப்பெரிய ரசிகன். அவர் மிகச்சிறந்த வீரர்.
அவரது டெஸ்ட் போட்டி சாதனையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். அது அவருக்கு மைல்கல்லாக அமைந்தது. அவர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என நம்புகிறேன்’ என்றார்.
இதற்கு முன்பு இந்திய வீரர்கள் 8 பேர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
அந்த வரிசையில் இப்போது சேவாக்கும் இணைய உள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 8448 ரன்கள் குவித்துள்ளார்.
0 comments:
Post a Comment