சச்சின் ஓய்வு பெற வேண்டுமா - கபில், அசார் பல்டி

சச்சின் ஓய்வு பெறுவது குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் இந்திய கேப்டன்கள் கபில்தேவ், அசார் தெரிவித்தனர்.

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர்ந்து மூன்று முறை "போல்டு' முறையில் அவுட்டானார். இவரது "புட்வொர்க்' சரியில்லை என அசார், கவாஸ்கர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் விமர்சித்தனர்.

தற்போது கபில்தேவ், அசார் இருவரும் தங்களது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து கபில் கூறுகையில், ""உண்மையைக் கூற வேண்டுமானால், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்கு பின் சச்சின் ஓய்வு பெற வேண்டும் எனக் கூறினேன். தற்போது இதனை திரும்பப் பெறுகிறேன்.

ஏனெனில் 23 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வரும் இவர் மட்டும் தான், தனது ஓய்வு முடிவை எடுக்க வேண்டும். மற்றவர்கள் இதுகுறித்து பேசுவது தவறு. பொதுவாக பிரியமான விளையாட்டை விட்டு அவ்வளவு எளிதாக விலகி விட முடியாது. இது மிகவும் கடினமான ஒன்று,'' என்றார்.

அசார் கூறுகையில், ""சச்சின் உடல் அசைவுகள் மிகவும் மந்தமாக உள்ளன. "புட்வொர்க்' சிறப்பாக அமையவில்லை. தவறான "ஷாட்' அடிக்கிறார் எனக் கூறினேன். இதற்கு, இவர் மூன்று மாதங்களுக்கு பின் இரண்டு டெஸ்டில் மட்டுமே விளையாடினார்.

தற்போது ரசிகர்கள் விராத் கோஹ்லியைப் பற்றி பேசுகின்றனர். ஏனெனில் இவர் சிறப்பாக விளையாடுகிறார். இதற்கு இவர் நிறைய போட்டிகளில் விளையாடுவது காரணம்.

இதேபோல சச்சினும் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன்மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியும்,'' என்றார்.

0 comments:

Post a Comment