சச்சின் என்ன செய்ய வேண்டும்

டெஸ்ட் போட்டிகளில் "ஹாட்ரிக்' போல்டான சச்சின், இக்கட்டான நிலையில் உள்ளார். கிரிக்கெட்டுக்கு "குட்பை' சொல்வாரா அல்லது தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். இவரது "பார்ம்' சமீப காலமாக மோசமாக உள்ளது. இதன் உச்சக்கட்டமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து மூன்று முறை "போல்டு' முறையில் அவுட்டானார்.

கடந்த ஆறு டெஸ்ட் இன்னிங்சில் (15, 8, 25, 13, 19, 17) ஒரு அரைசதம் அடிக்கவில்லை. இதையடுத்து இவர் ஓய்வு பெற்று, இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில், இவர் ஓய்வு பெற வேண்டுமென 56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர், உலக கோப்பை(50 ஓவர், 2011) வென்ற கையுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஏற்கனவே கூறினார்.

கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டு, எம்.பி.,யாக பார்லிமென்ட்டில் தனது கடமையை செய்யும் நேரம் நெருங்கி விட்டதாக பலரும் கருதுகின்றனர். அதே நேரத்தில், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென கேப்டன் தோனி, கங்குலி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையில் சச்சின் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

நியூசிலாந்து தொடரில் இவரது ஆட்டம் குறித்து, இந்திய கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து:

கவாஸ்கர்: சச்சினுக்கு வயதாகி விட்டதால், பந்து விழும் வேகத்துக்கு ஏற்ப கால்களை அசைத்து விளையாட முடியவில்லை. கண்களால் பந்தை விரைவாக பார்க்க முடியவில்லை. மூன்று முறை "போல்டானது' மாஸ்டர் பேட்ஸ்மேனுக்கு ஏற்ற வகையில் அமையவில்லை.

அசார்: தற்போது சச்சின் உடல் அசைவுகள் மிகவும் மந்தமாக உள்ளன. "புட்வொர்க்' சிறப்பாக அமையவில்லை. தவறான "ஷாட்' அடிக்கிறார்.

கங்குலி: உண்மையாக சொன்னால், சச்சினுக்கு ஓய்வு பெற வேண்டிய நேரம் வரவில்லை. அவர் ஒரு ஜாம்பவான். கிரிக்கெட் விளையாடுவதை பெருமையாக நினைக்கிறார். தனது ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்தவர். அவரது திறமை இன்னும் குறையவில்லை.

"ஷாட்' தேர்வு செய்வதில் தான் பிரச்னை உள்ளது. இதற்கு நீண்ட காலமாக விளையாடாமல் இருந்ததே காரணம். போதிய பயிற்சி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அசத்துவார்.

தோனி: சச்சின் ஆட்டம் குறித்து கவலைப்படவில்லை. இவரது "பார்ம்' குறித்து விமர்சிக்கும் போது, அடுத்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுப்பார். அந்த ஆட்டத்தை காண நானும் காத்திருக்கிறேன்.

0 comments:

Post a Comment