சவாலான ஐ.பி.எல்., கேப்டன் பதவி

இந்திய அணியை வழிநடத்துவதை விட, ஐ.பி.எல்., தொடரில் கேப்டனாக செயல்படுவது சவாலான விஷயம்,'' என, இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலித்தவர் கோல்கட்டாவை சேர்ந்த சவுரவ் கங்குலி, 40. ஓய்வுக்கு பின் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி வரும் இவர், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

கேப்டன் அனுபவம் குறித்து கங்குலி கூறியது: இந்திய அணியை வழிநடத்துவதற்கும், ஐ.பி.எல்., தொடரில் கேப்டனாக செயல்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது எளிதான காரியம். ஆனால் ஐ.பி.எல்., போட்டிகளில் கேப்டனாக இருப்பது சவாலான விஷயம்.

ஐ.பி.எல்., போட்டிகளில் அணி உரிமையாளர்களின் நெருக்கடி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு போட்டிக்கு முன் மற்றும் போட்டி முடிந்த பின் அவர்களுக்கு நிறைய பதில் கூற வேண்டி இருக்கும்.

இதற்காக இரண்டு முறை எனது மொபைல் போனை "சுவிட்ச் ஆப்' செய்துவிட்டேன். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில், கிரிக்கெட் போர்டு மற்றும் தேர்வுக்குழுவினரிடம் இருந்து எவ்வித போன் அழைப்பும் வரவில்லை. ஆடுகளத்தில் எந்த முடிவையும் சுதந்திரமாக எடுக்க முடியும்.

ஐ.பி.எல்., போட்டிகளின் வரவால், முதல் தர போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடரின் மூலம் இளம் வீரர்களுக்கு பணம் மட்டுமல்லமால், எதிர் கால பாதுகாப்பும் கிடைக்கிறது. ரஞ்சி கோப்பை போட்டியில் ரூ. 400 மட்டுமே பெறுகின்றனர்.

வரும் காலத்தில் இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தால், ரஞ்சி கோப்பை தொடரில் வீரர்களின் திறமையை அடிப்படையாக கொண்டு அணியைத் தேர்வு செய்வேன். ஏனெனில் டெஸ்ட் போட்டிக்கு ரஞ்சி கோப்பை முன் உதாரணமாக விளங்குகிறது.

இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment