ஐ.பி.எல்., தொடரில் புதிய அணி - பி.சி.சி.ஐ., முடிவு

வரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில், டெக்கானுக்குப் பதில் புதிய அணியை சேர்க்க, பி.சி.சி.ஐ., முடிவு செய்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பில், இடம் பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 2009ல் கோப்பை வென்றது. அடுத்து பெரிய அளவில் சாதிக்காததால் கடனில் மூழ்கியது. வீரர்களுக்கு சம்பளம் கூட தர முடியவில்லை.

அணியை ஏலம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டது. 2008ல் ரூ. 428 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த அணியை, ஆந்திராவின் பி.வி.பி., வென்சர்ஸ் நிறுவனம் ரூ.900 கோடிக்கு கேட்டது. இது போதாது எனக் கூறி, ஏலத்தை டெக்கான் நிர்வாகம் ரத்து செய்தது.

இதனிடையே, ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் டெக்கான் அணியை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விவாதிக்க நேற்று சென்னையில் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டம் நடந்தது. நீண்டநேரம் நடந்த விவாதத்துக்குப் பின், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியது:

டெக்கான் அணி குறித்து விவாதித்தோம். இருப்பினும், விவகாரம் இப்போது கோர்ட்டுக்கு சென்றுள்ளதால், எந்த முடிவும் எடுக்கவில்லை.

புதிய அணியை சேர்க்க, "டெண்டர்' விடுவது தொடர்பாக பேசினோம். ஒருவேளை டெக்கான் அணிக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு வழங்கினால், ஆறாவது தொடரில் 10 அணிகள் இடம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.


ஐகோர்ட் தடையா

பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்," மும்பை ஐகோர்ட்டில் சில விளக்கங்கள் தர வேண்டும் என, பி.சி.சி.ஐ., கேட்டது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட ஐகோர்ட், எவ்வித உத்தரவையும் பிறப்பிக்காமல், நாளைக்கு விசாரணையை ஒத்திவைத்தது. டெக்கான் அணி நீக்கத்துக்கு தடை விதிக்கவில்லை,' என, தெரிவித்தது.

0 comments:

Post a Comment