இங்கிலாந்துக்கு எதிராக சுழலில் அசத்திய ஹர்பஜன் சிங் திறமையை நிரூபித்து, தனது தேர்வை நியாயப்படுத்தினார்,'' என, இந்திய கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார்.
கொழும்புவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.4 ஓவரில் 80 ரன்களுக்கு சுருண்டு, 90 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. சுழலில் அசத்திய அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் 4 விக்கெட் கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். சர்வதேச போட்டியில் ஒரு ஆண்டுக்கு பின் களமிறங்கிய இவர், முத்திரை பதித்தார்.
இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
இங்கிலாந்துக்கு எதிராக ஹர்பஜன் சிங் செயல்பாடு பாராட்டுக்குரியது. எதிர்பார்த்ததை விட அருமையாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்கு பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, எழுச்சி கண்டது வரவேற்கத்தக்கது.
"தூஸ்ரா' உள்ளிட்ட பல்வேறு முறையில் பந்துவீசி, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட இவர்,"பீல்டிங்' வியூகம் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தனது பணியில் மட்டும் முழு கவனம் செலுத்தினார்.
பிரச்னை ஏராளம்:
அணியின் 11 வீரர்களை தேர்வு செய்வதில் தான் நிறைய பிரச்னை உள்ளது. அடுத்த போட்டியில் யார் இடம் பெறப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசி கட்டத்தில் ஹர்பஜன் அதிரடியாக ஆடி, பேட்டிங்கிலும் கைகொடுப்பார். இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம்.
ரோகித் முன்னுரிமை:
இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இவரை மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக குறிப்பிடுவேன். இதற்காக யுவராஜை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை. அனைத்து வகையான "ஷாட்' அடிக்கும் திறமை ரோகித்திடம் உண்டு. ரெய்னாவுடன் சேர்ந்து "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ற வீரராக திகழ்கிறார்.
அடுத்து வரும் போட்டிகளில் "டாப்-ஆர்டரில்' களமிறங்குவார். துவக்க வீரராக காம்பிர் எழுச்சி கண்டது பாராட்டுக்குரியது. "மேட்ச் வின்னரான' இவர், இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் தனிநபராக போராடி வெற்றி தேடித் தந்துள்ளார்.
இப்போட்டியில் இர்பான் பதானின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. "பவர் பிளே' ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன் வேட்டையை தடுத்தார்.
மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து விக்கெட் வீழ்த்தியது பாராட்டுக்குரியது.
இவ்வாறு தோனி கூறினார்.
0 comments:
Post a Comment