மகா யுத்தம் - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்


டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் இன்றைய "சூப்பர்-8' போட்டியில் கிரிக்கெட் அரங்கின் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. 

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. இன்றைய "சூப்பர்-8' போட்டியில் "குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் பிரிவு-2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. 

வருவாரா சேவக்:

இந்திய அணியில் மீண்டும் சேவக் இடம் பெறுவது அவசியமாகிறது. காம்பிருடன் சேர்ந்து அதிரடி துவக்கம் தருவார் என நம்புவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திணறிய காம்பிர், மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. 

தோனி வியூகம்:

"மிடில் ஆர்டரில்' இளம் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ரெய்னா, யுவராஜ் சிங் தங்கள் பங்கிற்கு அசத்த தயாராக உள்ளனர். தோனி மந்தமான ஆட்டத்தை கைவிட்டு, விரைவாக ரன் சேர்க்க வேண்டும். ஐந்து பவுலர்களா அல்லது 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதா என்ற நெருக்கடியில் உள்ளார். இவரது வித்தியாசமான வியூகங்கள் இன்று எடுபட வேண்டும்.

தேறுமா "பவுலிங்':

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில் பவுலிங்கில் சொதப்பியது இந்திய அணி. இதனால், இன்று பவுலர்கள் எழுச்சி பெற வேண்டும். அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், இர்பான் பதான் கைகொடுக்கலாம். 

தமிழகத்தின் பாலாஜி கடைசி கட்ட ஓவர்களில், பாகிஸ்தானின் ரன்குவிப்புக்கு தடையிட்டால் நல்லது. "ஆல்-ரவுண்டர்' இடத்தில் வரும் இர்பான் பதான் தனது வேலையை சரியாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழலில் "சீனியர்' ஹர்பஜனுடன், "ஜூனியர்' அஷ்வின் இணைந்து அசத்தலாம். பியுஸ் சாவ்லா இடம் பெறுவது சந்தேகமே. 

இத்தொடருக்கான பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்திய அணி இம்முறை பதிலடி கொடுக்க வேண்டும். தவிர, ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக தோற்றதால், "ரன்ரேட்டில்' முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இதனால், இன்று "மெகா' வெற்றி தேவைப்படுகிறது. 

கம்ரான் பலம்:

முதல் "சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற உற்சாகத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. "பேட்டிங்' வலுவாகவே உள்ளது. "ஆல் ரவுண்டர்' கேப்டன் முகமது ஹபீஸ், இம்ரான் நசிர் அசத்தல் பார்மில் உள்ளனர். "மிடில் ஆர்டரில்' வரும் ஜாம்ஷெட், சோயப் மாலிக் ஆகியோரும் ரன்வேட்டை நடத்துகின்றனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், இவரது சகோதரர் உமர் அக்மல் இருவரும் இந்திய அணிக்கு மீண்டும் தொல்லை தரலாம். 

அப்ரிதி "ஆபத்து':

"ஆபத்தான' அப்ரிதி, முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முயற்சிப்பார். இவரை விரைவில் வெளியேற்றுவதைப் பொறுத்து, இந்திய அணியின் வெற்றி அமையும்.

பவுலிங்கில் அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். "தூஸ்ரா', "தீஸ்ரா' என, ஒவ்வொரு பந்துக்கும் வித்தியாசம் காட்டும் இவர், இன்றும் மிரட்டலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல், பேட்டிங்கிலும் கைகொடுப்பது சிறப்பம்சம். சோகைல் தன்விர் இருப்பது சாதகமான விஷயம். இவர்களுடன் சுழலில் அப்ரிதியும், ராஜா ஹசனும் அசத்துவர். 

வெற்றி வரலாறு:

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் கோப்பை வெல்லும் நோக்கத்தில் உள்ளதால், இன்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானது. இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. ஆனாலும், உலக கோப்பை அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாறு இன்றும் தொடரட்டும்.

100 சதவீத வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை தொடர் என்று வந்து விட்டால் இந்திய அணியினர் எழுச்சி பெற்று விடுவர். இதுவரை நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடர்களில் 5 முறை (1992, 1996, 1999, 2003, 2012) இரு அணிகளும் மோதின. இவை அனைத்திலும் இந்திய அணி தான் வென்றது. 

இது, "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கிலும் தொடர்கிறது. கடந்த 2007ல் முதன் முதலாக நடந்த தொடரின் லீக் மற்றும் பைனலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால், இன்றும் வெற்றி தொடரும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முதல் "டை'

"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதன் முதலில் "டை' ஆன போட்டி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் தான். 

2007ல் டர்பனில் நடந்த இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. பின், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின் "பவுல் அவுட்' முறையில் இந்தியா வென்றது. 

"பவுல் அவுட்டில்' வென்றது எப்படி

 ஐ.சி.சி., விதிப்படி அப்போது "சூப்பர் ஓவர்' முறைக்கு பதிலாக "பவுல் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. 

அதாவது, இரு அணியிலும் தலா 5 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவரும் மாறி மாறி பவுலிங் செய்து, ஆடுகளத்தில் இருக்கும் "ஸ்டம்சுகளை' போல்டு செய்ய வேண்டும். இப்படித்தான், பாகிஸ்தானுக்கு எதிரான "சூப்பர் ஓவரில்' இந்தியா விளையாடியது. 

இதன்படி, முதல் இரு வாய்ப்புகளில் இந்தியாவின் சேவக், ஹர்பஜன் "போல்டாக்கினர்'. பாகிஸ்தானின் யாசிர் அராபத், <உமர் குல் வீணடித்தினர். அடுத்து உத்தப்பாவும் அசத்தினார். மூன்றாவது வாய்ப்பில் அப்ரிதியும் சொதப்ப, 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, "சூப்பர்-8'ல் நுழைந்தது.


எல்லாமே செப்டம்பர் 

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய இரு "டுவென்டி-20' உலக கோப்பை போட்டிகளும் செப்டம்பர் மாதம் தான் நடந்தது. அதாவது, 2007, செப்., 14ல் லீக் போட்டி, செப்., 24ல் பைனலில் மோதின. இப்போது மூன்றாவது முறையாக, மீண்டும் செப்., 30ல் மோதவுள்ளன. 


களத்தில் எகிறும் "டென்ஷன்'

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் வழக்கமாகவே பரபரப்பு அதிகம் இருக்கும். உலக கோப்பை போட்டிகள் என்றால் கூடுதல் "டென்ஷன்' தான். இதுவரை இந்த அணிகள் மோதிய உலக கோப்பை போட்டிகளில் நடந்த, விறுவிறு சம்பவங்கள் சில...

1992, மார்ச் 4ல் சிட்னியில் நடந்த லீக் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார் கிரண் மோரே. பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் பேட்டிங் செய்த போது, ஒவ்வொரு முறையும் தவளை மாதிரி குதித்து "அவுட்' கேட்டார். உடனே மோரேயுடன், மியான்தத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியதும், கிரண் மோரே போல மூன்று முறை மேலும், கீழுமாக குதித்து சூடேற்றினார். 

* 1996ல் பெங்களூருவில் நடந்த காலிறுதியில் இரு அணிகள் மோதின. இந்திய அணியின் இலக்கை (287/8) துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அமீர் சோகைல், சயீத் அன்வர் "சூப்பர்' துவக்கம் தந்தனர். தனது பந்தில் பவுண்டரி அடித்த சோகைலை, வெறுப்புடன் பார்த்தார் வெங்கடேஷ் பிரசாத். அதற்கு சோகைல், என்னைப் பார்க்காதே, பந்தைப் பார் என்பது போல "சைகை' செய்தார். அடுத்த பந்தில் சோகைல் போல்டாக, பிரசாத்தை கோபத்துடன் பார்க்க, வெளியே போ என, தன் பங்கிற்கு சைகை காண்பிக்க, அரங்கமே அதிர்ந்தது. 

* 2003ல் பாகிஸ்தான் அணி "வேகப்புயல்' சோயப் அக்தரை நம்பி களமிறங்கியது. ஆனால், இவரது முதல் ஓவரில் சச்சின் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என தொடர்ந்து அடித்து அசத்த, இவர் தொடர்ந்து பவுலிங் செய்ய வரவில்லை.

மறக்க முடியாத "கேட்ச்'

கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. 
பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. ஜோகிந்தர் சர்மா வீசிய இந்த ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்சர் விளாசினார் மிஸ்பா. இதனால் 4 பந்தில் 6 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தை "ஸ்கூப் ஷாட்' மூலம் விக்கெட் கீப்பருக்கு பின்புறம் தூக்கி அடித்தார் மிஸ்பா. அதை ஸ்ரீசாந்த், அப்படியே தனது கைக்குள் அடக்க, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.

காம்பிர் "டாப்'

இரு அணிகள் இடையிலான "டுவென்டி-20' உலக கோப்பை போட்டியில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இந்தியாவின் காம்பிர் பெற்றுள்ளார். 2007ல் நடந்த பைனலில் 75 ரன்கள் (54 பந்து) எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் மிஸ்பா, 53 ரன்கள் எடுத்துள்ளார்.

இர்பான் அபாரம்

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்தியா சார்பில், இர்பான் பதான் 4 ஓவரில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் (2007, பைனல்) வீழ்த்தியது தான் சிறப்பான பந்து வீச்சு. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆசிப், 18 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மழை வருமா

இன்றைய போட்டி நடக்கும் கொழும்புவில், வெப்பநிலை அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும். இடியுடன் கூடிய மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment