ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் முரளி விஜய் 266 ரன்கள் விளாச, "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி வலுவான நிலையில் உள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் "நடப்பு' ரஞ்சி கோப்பை சாம்பியன் ராஜஸ்தான், "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 253 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது.
இரட்டை சதம்:
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்காக விளையாடும் தமிழக வீரர் முரளி விஜய் இரட்டை சதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பத்ரிநாத் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த போது பத்ரிநாத் (55) அவுட்டானார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது 394 பந்தில் 266 ரன்கள் (6 சிக்சர், 36 பவுண்டரி) எடுத்த முரளி விஜய் அவுட்டானார். சிறிது நேரத்தில் தினேஷ் கார்த்திக் (56) வெளியேறினார்.
வலுவான முன்னிலை:
அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (3), ஹர்மீத் சிங் (1) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 7 விக்கெட்டுக்கு 607 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதையடுத்து 354 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றது.
ராஜஸ்தான் பின்னடைவு:
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ராஜஸ்தான் அணிக்கு அன்கித் லம்பா (4) மீண்டும் ஏமாற்றினார். மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து, 311 ரன்கள் பின்தங்கி இருந்தது. சாக்சேனா (17), கேப்டன் கனித்கர் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
"ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
0 comments:
Post a Comment