கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் - டிராவிட்

தற்போதுள்ள இந்திய அணியில் விராத் கோஹ்லி தான் சிறந்த பேட்ஸ்மேன்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டினார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய இந்திய வீரர் விராத் கோஹ்லி ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 212 ரன்கள் எடுத்தார்.

இதுகுறித்து டிராவிட் கூறியது: தற்போதுள்ள இந்திய அணியில் விராத் கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன். சமீபகாலமாக இவரது "பார்ம்' அருமையாக உள்ளது. டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுகிறார். இவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய கோஹ்லியை கேப்டன் தோனி சிறப்பாக வழிநடத்தி வெற்றி தேடித்தந்தார். இது கோஹ்லிக்கு அதிக நம்பிக்கை அளித்திருக்கும்.

கோஹ்லியின் பேட்டிங் திறமையை ஜூனியர் அணிக்காக (19 வயது) விளையாடியது முதல் பார்த்து வருகிறேன். இவருடன் ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் இணைந்து விளையாடி உள்ளேன். இவரது பேட்டிங்கில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது.

கோஹ்லி, இளம் வயதில் விளையாடிய போது செய்த தவறுகளை தற்போது திருத்திக் கொண்டுள்ளார். இதன்மூலம் இவர், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறார் என்பது தெளிவாகிறது. முன்னதாக களத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் இவர், தற்போது அதனை குறைத்துக் கொண்டார்.

இதேபோல இளம் வீரர் அஜின்கியா ரகானே வரும் காலத்தில் இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருவார்.

ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, பலமான பேட்டிங் வரிசை காரணமாக லெவன் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் பெங்களூரு அணியில் இணைந்த பின், லெவன் அணியில் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தினார்.

பொதுவாக இளம் வீரர்கள் "டிரஸிங் ரூமில்' நிறைய விஷயங்களை சீனியர் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஆடுகளத்தில் விளையாடும் போதுதான் உண்மையான அனுபவம் கிடைக்கும்.

வரும் காலத்தில் இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் தொடரை நீக்கிவிட்டு, ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரை நடத்தலாம். "டுவென்டி-20' போட்டிகள் எழுச்சி கண்ட இக்காலத்தில், இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ஆறு முதல் ஏழு போட்டிகள் வரை நடத்துவதில் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அதிக அளவில் ரசிகர்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள், "டுவென்டி-20' என புதிய பரிமானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், டெஸ்ட் போட்டி தான் பாரம்பரியமிக்க போட்டியாக கருதப்படும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment